உலக வரலாற்றில் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டையும் கட்டியெழுப்புவதில் அந்த மக்களின் இலட்சியமும் தைரியமும் பக்கபலமாக இருந்தது. நமது அன்பான பிரஜைகளின் அசைக்க முடியாத தைரியத்தின் பலனால், நாம் முன்பு இருந்ததை விட சிறந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று உறுதியாக நம்புகிறோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தேசிய அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான அபிவிருத்திக்காக அடித்தளமிடப்பட்ட ஆண்டாக 2025 ஆம் ஆண்டு அமைந்தது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையைப் பதிவு செய்தல், 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் கூடுதலான அரச வருவாயை ஈட்டுதல், வரலாற்றில் முதல் முறையாக முதன்மை கணக்கு மிகையை பெற்றமை , பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி வருவாயை சுமார் 17 பில்லியன் டொலர்களாக அதிகரித்தமை , எமது நாட்டு வரலாற்றில் அரச வருவாய் இலக்குகளை விஞ்சும் ஒரே ஆண்டாக 2025 ஆம் ஆண்டை மாற்றியமை மற்றும் அண்மைக் காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் நாட்டிற்கு வருகை தந்த வருடமாக பதிவானமை போன்றன 2025 ஆம் ஆண்டில் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க பொருளாதார சாதனைகளாகும் என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த ஊழல் நிறைந்த அரசியல் முறைமைக்கு பதிலாக பொதுமக்களுக்கு நேர்மையாக சேவை செய்யும் ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரத்தை நாட்டில் உருவாக்கவும் எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்பதற்கான ‘ முழு நாடுமே ஒன்றாக ‘ தேசிய செயற்பாட்டைப் போன்ற திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு இவை 2025 ஆம் ஆண்டு நாட்டின் அரசியல் மற்றும் சமூக மாற்றத்தில் ஒரு திருப்புமுனையான ஆண்டாக பதியப்படுகிறது. அண்மைக் காலங்களில் நாடு எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவின் சவாலை கடந்த ஆண்டு நாங்கள் ஒன்றாக எதிர்கொண்டோம். நமது மக்களிடையே உள்ள மனிதநேயப் பண்பானது எந்த பேரழிவினாலும் பறிக்க முடியாத ஒரு சிறந்த குணம் என்பதை தெளிவாக நிரூபித்ததோடு நாடு முழுவதும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்ட சகோதர மக்களின் துயரத்தில் கைகோர்த்தார்கள்.
இந்தச் சவாலை எதிர்கொள்வதில் எங்களுக்கு ஆதரவளித்த வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும், மீளெழுச்சிக்கு நட்புறவின் பலத்தை வழங்கிய உலகெங்கிலும் உள்ள அனைத்து நட்பு நாடுகளுக்கும், அனர்த்த நிலையில் அயராது உழைத்த பொலிஸார் மற்றும் முப்படைகளுக்கும், இந்த நாட்டின் அரச உத்தியோகஸ்தர் களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஒன்றாக, இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. உலக வரலாற்றில் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டையும் கட்டியெழுப்புவதில் அந்த மக்களின் இலட்சியமும் தைரியமும் பக்கபலமாக இருந்தது. நமது அன்பான பிரஜைகளின் அசைக்க முடியாத தைரியத்தின் பலனால், நாம் முன்பு இருந்ததை விட சிறந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்.
புத்தாண்டு வருகை கடந்த ஆண்டின் அனுபவங்களை மீள்பரிசீலனை செய்வதற்கு வாய்ப்பு அளிப்பதோடு, புத்தாண்டு தொடர்பில் சாதகமான மனப்பாங்குகளுடன் மீள திட்டமிடுவதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகிறது.
நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தில் அசைக்க முடியாத உறுதியுடனும் நம்பிக்கையுடனும் சகோதரத்துவத்துடன் கைகோர்க்க அனைவரையும் நான் அழைப்பு விடுகிறேன். மலர்ந்த 2026 புத்தாண்டு உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான புத்தாண்டாக அமைய வாழ்த்துவதாக ஜனாதிபதி தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் வாழ்த்துச் செய்தி
2026 ஆம் ஆண்டின் விடியலில் நாம் நின்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்து வந்த 2025ஆம் ஆண்டினை மீளாய்வு செய்வது காலத்தின் தேவையென கருதுவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மக்கள் நல அரசாங்கமாக, பல தீர்க்கமான மற்றும் முன்னோடியான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்த ஓர் ஆண்டாக 2025ஆம் ஆண்டினை எண்ணி ஒருபுறம் நாம் மகிழ்ச்சியடைய முடியும். புதிய அரசியல் கலாசாரமொன்றின் அடிப்படையில், அரச நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், ஊழலற்ற வினைத்திறன் மிக்க அரச சேவைக்கான அடித்தளத்தை அமைக்கவும் எம்மால் முடிந்துள்ளதென நம்புவதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ஸ்திரத்தன்மை, சர்வதேச ரீதியாக எமது நாட்டின் மீது கட்டியெழுப்பப்பட்டு வரும் நேர்மறையான கண்ணோட்டம், வெளிப்படைத்தன்மை மிக்க ஆட்சி முறைமை மற்றும் சட்டத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தியமை போன்ற பல பிரதான துறைகளின் ஊடாக 2025ஆம் ஆண்டைப் பற்றி நாம் திருப்தியடையலாம்.
எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் எதிர்கொள்ள நேர்ந்த துரதிர்ஷ்டவசமான இயற்கை அனர்த்தம், எமது நாட்டிற்குச் சவாலானதொரு காலப்பகுதியாக அமைந்தது. அது நம் அனைவரது மனங்களையும் கவலையில் ஆழ்த்திய போதிலும், அத்தகைய இக்கட்டான தருணத்திலும் இலங்கையர்களாக நாட்டு மக்கள் வெளிப்படுத்திய சகோதரத்துவம், மனிதாபிமானம் மற்றும் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிய விதம் குறித்து இன்று உலகளவில் பேசப்பட்டு வருகின்றது. அந்தச் சவால்களை வெற்றிகொண்டு, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை ஆற்றி, சீர்குலைந்த அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் உறுதியான அர்ப்பணிப்புடனேயே 2026ஆம் ஆண்டிற்குள் நாம் கால்பதிக்கின்றோம்.
கல்வித் துறையில் தரமான, அதேநேரம் நிலையான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற,கல்வித்துறையின் மாற்றம், அரச சேவை உட்பட அனைத்துத் துறைகளையும் டிஜிட்டல் மயமாக்கல், சாத்தியமான புதிய எண்ணக்கருக்களைக் கொண்ட முயற்சியாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் உலகளாவிய ரீதியில் முன்னேறுவதற்கான சூழலை உருவாக்குதல், போதைப்பொருள் அற்ற, சுற்றாடலை நேசிக்கும் , மனிதாபிமானம் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற பல சிறப்பான நோக்கங்களுடன், இன, மத மற்றும் கட்சிப் பேதங்களற்ற பலமான இலங்கை என்ற அடையாளத்துடன் இந்நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பு அரசாங்கம் உட்பட ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இருக்கின்றது என்பதை இவ்வேளையில் நினைவூட்ட விரும்புகிறேன்.
கடந்த ஆண்டில் நாம் எதிர்கொண்ட சகலவிதமான சவால்களையும் சக்தியாக மாற்றிக்கொண்டு, புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்குமாறு அனைவரையும் அழைப்பதாக பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் வாழ்த்துச் செய்தி
2026ஆம் ஆண்டு இலங்கை திருநாட்டிற்குப் பல்வேறு சவால்கள் நிறைந்த ஆண்டாக அமையும் என்பதில் ஐயமில்லை என்றும், அவற்றை உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அறிவார்ந்த ரீதியில் எதிர்கொள்ள மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியாக நாடு சந்தித்து வரும் நெருக்கடிகள் தற்போது புதிய பரிமாணங்களை எட்டியுள்ளன. இவ்வாறான சிக்கலான சூழலை வெறும் ஒருதலைப்பட்சமான திட்டங்களால் மட்டும் வெற்றிகொள்ள முடியாது. எனவே, சர்வதேச மற்றும் தேசிய அளவில் முன்னெப்போதையும் விட பரஸ்பர ஒத்துழைப்பு தற்போதைய காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது.
ஏமாற்றம் மற்றும் உதவியற்ற நிலையில் முடங்கிக் கிடப்பதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளதோடு, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், உடன்படக்கூடிய விடயங்களில் இணக்கப்பாட்டுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியது போல், உண்மை மற்றும் நீதி தொடர்பான விடயங்களில் பெரிய மற்றும் சிறிய பிரச்சினைகளுக்கு இடையே வேறுபாடுகள் இல்லை. ஏனெனில் மனிதர்களை நடத்துவது தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை. நாட்டின் அனைத்து மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பாகுபாடின்றி ஒரே சீராகக் கருதி, அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிய நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். இத்தகைய தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட மதத் தலைவர்கள், அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தைரியமும் சக்தியும் கிடைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

