ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளை கொண்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு உடனடியாக 25 சதவீத சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
சமூக ஊடகப் பதிவொன்றில் அவர் இதனை அறிவித்ததுடன், “ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாடும் அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளுக்கும் 25% வரி செலுத்த வேண்டும். இந்த உத்தரவு இறுதியானது” என குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், “ஈரானுடன் வியாபாரம் செய்வது” என்ற வரையறை தொடர்பான விபரங்களை அவர் வெளியிடவில்லை.
ஈரானின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளாக சீனா முதன்மை வகிப்பதுடன், அதனைத் தொடர்ந்து ஈராக், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த புதிய வரி விதிப்பு, ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மூன்றாவது வாரத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், தெஹ்ரானின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் இராணுவ தலையீடு மேற்கொள்ளப்படும் என டிரம்ப் முன்னதாக எச்சரித்திருந்தார். இதனிடையே, விமானத் தாக்குதல்கள் உள்ளிட்ட இராணுவ விருப்பங்கள் இன்னும் “மேசையில் உள்ளன” என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஈரானின் நாணயமான ரியாலின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்ததையடுத்து கடந்த டிசம்பர் இறுதியில் போராட்டங்கள் தொடங்கின. அவை தற்போது உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனெய்க்கு எதிரான அரசியல் நம்பகத்தன்மைச் சிக்கலாக மாறியுள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் செய்தி நிறுவனம் (HRANA) வழங்கிய தகவலின்படி, போராட்டங்களில் இதுவரை சுமார் 500 போராட்டக்காரர்களும் 48 பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் தகவல்களை உறுதிப்படுத்துவது கடினமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் அணு திட்டம் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள சர்வதேச தடை உத்தரவுகள், அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் ஆகியவை இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளன. கடந்த ஒரு வருடத்தில் ரியால் வரலாற்றிலேயே குறைந்த மதிப்புக்கு சரிந்துள்ளதுடன், பணவீக்கம் 40 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இதனால் சமையல் எண்ணெய், இறைச்சி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

