டிட்வா அனர்த்தத்தை அரசாங்க வேலைத்திட்டங்களை முடக்க பயன்படுத்தமாட்டோம் – ஜனாதிபதி

0
67
Article Top Ad

‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தத்தை அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களைப் பின்னோக்கித் தள்ளவோ அல்லது செயலிழக்கச் செய்யவோ ஒருபோதும் பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘REBUILDING SRI LANKA’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வந்த நாடு படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டு வரும் சூழலில் இந்தச் சூறாவளி ஏற்பட்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அதனை காரணமாக்கி அரசாங்கம் தனது பொறுப்புகளில் இருந்து நழுவிக்கொள்ள வேண்டிய எந்தத் தேவையும் இல்லை என வலியுறுத்தினார்.

“நாங்கள் தயாரித்துள்ள நிகழ்ச்சி நிரலை (Agenda) கைவிடாமல், இந்த அனர்த்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில்தான் எங்கள் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

மேலும், “தேவைப்பட்டால் இந்த அனர்த்தத்தின் மீது பழிகளைச் சுமத்தி தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு எமக்கு இருந்தது. வரலாற்றில் 30 ஆண்டுகளாக பல்வேறு அழிவுகளுக்கு யுத்தமே காரணமாகக் காட்டப்பட்டது. சில நேரங்களில் தொற்றுநோய் நிலைமைகளும் போர்வையாக பயன்படுத்தப்பட்டன. ஆனால், எமது வேலைத்திட்டத்தைப் பின்னோக்கித் தள்ளவோ அல்லது முடக்கவோ இதனைப் பயன்படுத்தப் போவதில்லை என்ற தீர்மானத்திற்கே நாங்கள் வந்துள்ளோம்” எனவும் ஜனாதிபதி கூறினார்.

இதேவேளை, டித்வா சூறாவளி காரணமாக சுமார் 24 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 6,000 வீடுகள் முழுமையாக இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல், அனர்த்தங்களால் சுமார் 110,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வீடுகளுக்கு நேரடி சேதம் ஏற்படாத போதிலும், அபாயகரமான சூழ்நிலை காரணமாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்ட சுமார் 10,000 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.