பதவிக்காலம் நிறைவடையவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜனாதிபதி அநுரவை சந்தித்தார்

0
54
Article Top Ad

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள ஜூலி சாங் (Julie Chung), நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார்.

தமது பதவிக்காலத்தில் அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஜூலி சாங் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.

அதேபோல், ‘டித்வா’ (Ditwa) சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்குவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து அவர் ஆற்றிய பங்களிப்பிற்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அவர் வழங்கிய விசேட ஆதரவிற்கும் ஜனாதிபதி இதன்போது பாராட்டுத் தெரிவித்தார்.

2022 பெப்ரவரி மாதம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பதவியேற்ற ஜூலி சாங், அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவு உள்ளிட்ட, இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளில் பல முக்கிய மைல்கற்களில் தனது தலைமைத்துவத்தை வழங்கியிருந்தார்.