சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: கனடாவின் வெளிநாட்டு கொள்கையில் புதிய திருப்பம்

0
94
Article Top Ad

சீனாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், கனடா தனது வெளிநாட்டு கொள்கையில் முக்கியமான மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. பிரதமர் மார்க் கார்னி, உலக அரசியல் சூழல் மாறிவிட்டதாகவும், தற்போதைய நிலவரத்தை யதார்த்தமாக எதிர்கொள்வதே கனடாவின் அணுகுமுறை எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கார்னி, சீனாவுடனான இந்த உடன்பாடு, கனடாவை புதிய உலக ஒழுங்கிற்கு தயாராக்கும் என்றார். முன்பு சீனாவை கனடாவின் மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக குறிப்பிட்டிருந்த போதிலும், தற்போது சீனாவுடனான உறவு, ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவுடனான உறவை விட அதிகம் முன்னறிவிக்கக் கூடியதாக இருப்பதாக அவர் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தின் படி, கனடா சீன மின்சார வாகனங்களுக்கு விதித்திருந்த சுங்க வரிகளை தளர்த்தும். அதற்குப் பதிலாக, கனடாவின் முக்கிய வேளாண் ஏற்றுமதிகளுக்கு சீனா விதித்திருந்த பழிவாங்கும் சுங்க வரிகளை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு கனடாவிற்குள் கலவையான எதிர்வினைகள் வெளிப்பட்டுள்ளன. சாஸ்காச்சுவான் மாகாண முதல்வர் ஸ்காட் மோ, இதனை விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் நல்ல செய்தி என வரவேற்றுள்ளார். அதேவேளை, ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட், சீன மின்சார வாகனங்கள் கனடிய சந்தையை நிரப்பி, வேலைவாய்ப்புகளை பாதிக்கக்கூடும் என கவலை வெளியிட்டுள்ளார்.

வர்த்தக நிபுணர்களின் கணிப்பின்படி, சுங்க வரி தளர்வின் பின்னர் கனடாவின் மின்சார வாகன சந்தையில் சீன நிறுவனங்களின் பங்கு அதிகரிக்கக்கூடும். இதனால், கனடாவில் சந்தைப் பங்கைக் கூட்ட முயற்சிக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கும் அழுத்தம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சில அமெரிக்க அதிகாரிகள் இதனை விமர்சித்துள்ள நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவுடன் ஒப்பந்தம் செய்வது நல்ல விடயம் என கருத்துத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகள் குறித்து நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலையில், கனடா மாற்று வர்த்தக வாய்ப்புகளை தேடும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த சீனா ஒப்பந்தம் பார்க்கப்படுகின்றது.