இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு இன்று அரங்கேறியுள்ளது.
பெண் சாரதிகளை நியமிப்பது என்பது வெறும் வாய்வார்த்தைகளாக கூறப்பட்டுவந்த நிலையில் முதல் முறையாக பெண் சாரதிகளுக்கு அரசாங்கம் நியமனங்களை வழங்கியுள்ளது.
சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதன் மூலம், சிறந்த நாடு, சிறந்த சமூகம் மற்றும் பெண்களுக்கு உகந்த சூழலை உருவாக்க முடியும் என்ற அரசாங்கத்தின் கருபொருக்கு அமைய இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக பெண் சாரதிகள் பொது போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என பேசப்பட்டு வந்துள்ள போதிலும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ்தான் இந்த விடயம் மெல்ல மெல்ல சாத்தியமாக்கப்பட்டு வருகிறது.

ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளை உருவாக்கி கொடுத்தமைக்காக நியமனங்களை பெற்றுக்கொண்ட பெண் சாரதிகள் துறைசார் அமைச்சரான பிமல் ரத்நாயக்கவுக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துத் துறையை பிமல் ரத்நாயக்க பொறுப்பேற்ற நாளிலிருந்து, இந்தத் துறையில் பெண்களுக்கு வாய்ப்புகளை வழங்க முயற்சித்து வருகிறார்.
பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களுக்கு உணர்திறன் கொண்ட அமைச்சராகவும் அவர் உள்ளார். அதற்காகவும் அவருக்கு நன்றிகளை தெரிவிக்கிறோம் என குறித்த பெண் சாரதிகள் கூறியுள்ளனர்.
பெண்கள் உரிமைகளுக்கான பல போராட்டங்கள் இலங்கையில் நடைபெறுள்ளன. அவர்களின் முக்கிய உரிமைகளில் ஒன்றாக இந்த விடயத்தையும் கூறலாம். பொது போக்குவரத்தில் ஆண் சாரதிகள் மாத்திரமே ஈடுபட வேண்டும் என்று காணப்பட்ட எழுதப்படாத சட்டம் இன்று உடைக்கப்பட்டுள்ளது.
பல ஆசிய நாடுகளில் பெண் சாரதிகள் பணியாற்றுகின்றனர். இவர்கள் பொறுப்புணர்வு மிக்கவர்களாக பணியாற்றுகின்றனர். பெண் சாரதிகளால் ஏற்படும் விபத்துகள் மிக மிக குறைவாகும் என தரவுகள் கூறுகின்றனர்.
எனவே, பெண்களை போன்று ஆண் சாரதிகளுக்கும் முறையான பயிற்சிகளை அளித்து இந்த தொழில்துறையை ஒழுக்கமிக்கதாக மாற்றி விபத்துகளை தவிர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

