ஈரானுக்கு எதிராக புதிய இராணுவ நடவடிக்கை ஒன்றுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், ஈரான் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றுக்கு வருவதில் ‘புத்திசாலித்தனமாக’ செயற்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஈரான் அணு திட்டம் தொடர்பில் இராஜதந்திர தீர்வு ஒன்றை எட்ட முடியும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரொலின் லீவட் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியத்திற்கு அமெரிக்கா இரண்டாவது போர் கப்பலை அனுப்பி இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கும் நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று சுவிட்சர்லாந்தில் இடம்பெறும் அமெரிக்க மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளிலும் முன்னேற்றம் எட்டப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும் ஈரான் மீதான தாக்குதலுக்கான சாத்தியங்கள் குறித்து ஆலோசகர்களுடன் டிரம்ப் கடந்த புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதோடு அவ்வாறான அமெரிக்காவின் தாக்குதல் எதிர்வரும் சனிக்கிழமைக்கு முன் இடம்பெறக் கூடும் என்றும் அந்த செய்திகள் குறிப்பிட்டிருந்தன.
கடந்த ஆண்டு ஈரானின் மூன்று அணு நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருந்தது.
எனினும் தாக்குதல் நடத்துவது தொடர்பில் டிரம்ப் இறுதி முடிவு ஒன்றை எட்டவில்லை வெள்ளை மாளிகையின் தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகளும் வெளியாகியுள்ளன.
‘ஈரானுக்கு எதிராக தாக்குதல் ஒன்றை நடத்துவதற்காக பல காரணங்கள் மற்றும் வாதங்கள் உள்ளன. ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்துடன் உடன்படிக்கை ஒன்றுக்கு வருவதற்கு ஈரான் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும். அவ்வாறு செயல்படாத சந்தர்ப்பத்தில் பல்வேறு விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரொலின் லீவட் குறிப்பிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

