இந்தியாவின் தென் மாநிலங்களின் ஒன்றான கேரளாவின் பெயரை அதிகாரப்பூர்வமாக “கேரளம்” என்று மாற்றுவதற்கான நீண்டகாலமாக நிலுவையில் உள்ள திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக கேரளாவின் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரம்பரிய மலையாளப் பெயரை முறைப்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டமன்றம் பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றியது. இந்த நிலையில், வரவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முதலில் 2023 ஆம் ஆண்டு இத்தீர்மானம் கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதுடன், 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் குறித்த தீர்மானம் புதுப்பிக்கப்பட்டு, ‘கேரளம்’ மாநிலத்தின் மொழியியல் பாரம்பரியத்தையும், வரலாற்று அடையாளத்தையும் சிறக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
கடந்த மாதம், கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள பா.ஜ.க. தலைவர் ராஜீவ் சந்திரசேகருக்கு எழுதிய கடிதத்தில், மாநிலத்தை `கேரளம்’ என்று மறுபெயரிடுவதற்கான மாநில அரசின் நடவடிக்கையை வலியுறுத்திருந்தார்.
மேலும் அந்த கடிதத்தில்,” மாநிலத்தின் அசல் பெயர் `கேரளம்’ என்றும், ஆங்கிலேயர்கள் தங்கள் வசதிக்காக அதை கேரளா என்று மாற்றியதாகவும், அவர்களால் செய்யப்பட்ட மாற்றங்கள் சரிசெய்யப்பட்டு உண்மையான பெயர் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும், இது மாநிலத்தின் கலாச்சாரத்துடன் ஒத்துப்போகிறது என்றும் கேரள முதல்வர் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டிருந்தார்.
அமைச்சரவையில் இந்த விடயம் அங்கீகரிக்கப்பட்டால், ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்குத் தேவையான அரசியலமைப்பு செயல்முறைத் தொடங்கும், இதில் பிரிவு 3 இன் கீழ் திருத்தங்கள் மற்றும் அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் புதுப்பிப்புகள் உள்ளிட்டவை அடங்கும்.
இந்தப் பெயர் மாற்றத்தால் நிர்வாக கட்டமைப்புகள், நிர்வாக வழிமுறைகள் மற்றும் பிராந்திய எல்லைகள் எதுவும் மாறாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

