ஒரே நாளில் இஸ்ரேல் முதல் கத்தார் வரை மத்திய கிழக்கில் 9 நாடுகள் மீது ஈரான் அதிரடி தாக்குதல்

0
22
Article Top Ad

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், தூதரகங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் அதிரடி  தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஈரானுடனான போரில் முக்கிய திருப்பமாக அந்நாட்டில் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவின் மீது கடந்த வாரம் மிகப் பெரிய தாக்குதலை நடத்திய அமெரிக்கா அங்கிருந்த இராணுவ நிலைகளையும் முற்றிலும் அழித்தது.

கடந்த 2 தினங்களில் ஈரானின் முக்கிய தலைவர்களான தேசிய பாதுகாப்பு செயலாளர் அலி லாரிஜானி உள்பட 3 பேர் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஒரே நாளில் இஸ்ரேல் மற்றும் வளைகுடாவின் 9 நாடுகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது.

உலகின் மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தி மையமான கத்தார் நாட்டில் உள்ள ராஸ்லபான் எரிசக்தி மையத்தின் மீது 14 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்சை குறிவைத்து 6 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 21 டிரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இவை அனைத்தையும் இடை மறித்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இங்குள்ள எரி சக்தி ஆலைகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுவதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதே போல சவுதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பெட்ரோலிய ரசாயன ஆலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும், பக்ரைன், ஜோர்டான், குவைத் நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஓமனில் தொழிற்சாலை மீது நடத்திய தாக்குதலில் பல தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய இஸ்ரேலில் ஈரான் நடத்திய தாக்குதலில் ஒரு வெளிநாட்டு தொழிலாளி கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கு தலைநகரமான பெயிட் அவாவில் ஈரான் நடத்திய தாக்குதலில் 3 பாலஸ்தீன பெண்கள் பலியாகியுள்ளனர்.

கடந்த 19 நாட்களில் 500 க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும்  2000 டிரோன்கள் மூலம் ஈரான் மத்திய கிழக்கில் தாக்குதல் நடத்தி உள்ளது.

அமெரிக்காவின் தாக்குதல் தொடர்ந்தால் அதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளிவுறவு அமைச்சர் அபாஸி கூறியுள்ளார்.

இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் இப்போதைக்கு தனியாதென சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.