இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நேற்றைய தினம் சிங்கப்பூரிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் பாரிய இதய சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 9 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த இந்தச் சத்திரசிகிச்சையை அடுத்து, அவர் அந்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சத்திரசிகிச்சைக்குப் பின்னர் ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை சீராக இருப்பதாகச் சிங்கப்பூரிலுள்ள அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இலங்கையிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் தங்கியிருந்து பல மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க, நிபுணத்துவ வைத்தியர்களின் ஆலோசனையின் பேரில் இந்த வார ஆரம்பத்தில் சிங்கப்பூர் நோக்கிப் பயணித்திருந்தார்.
எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க 77ஆவது பிறந்ததினத்தை கொண்டாட உள்ள நிலையிலேயே இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து மேலதிக விபரங்களை அறிந்துகொள்வதற்காக இலங்கையிலுள்ள அவரது அரசியல் ஆதரவாளர்களும் சர்வதேச இராஜதந்திரிகளும் மிகுந்த அவதானத்துடன் உள்ளனர்.

