ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் மோதல்: போரின் கட்டுப்பாடு ஈரானிடம் சென்றுவிட்டது – அலெக்ஸ் யங்கர் பகுப்பு

0
26
Article Top Ad

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள Iran–Israel–US Conflict தொடர்பாக, பிரித்தானியாவின் இரகசிய புலனாய்வு சேவையான (Secret Intelligence Service (MI6) முன்னாள் தலைவர் Alex Younger முக்கியமான மதிப்பீட்டை வெளியிட்டுள்ளார்.

அவரின் கருத்துப்படி, இந்தப் போரில் ஈரான் மிகவும் சாதுர்யமாகவும் திட்டமிட்ட முறையிலும் செயல்பட்டு வருவதால், போரின் நிலைமையில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு வாரங்களாக போரின் போக்கை நிர்ணயிக்கும் முக்கிய கட்டுப்பாட்டை அமெரிக்கா இழந்து, அது தற்போது ஈரானின் கைகளில் சென்றுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா இந்தப் போரின் சவால்கள் மற்றும் அதன் நீடிப்பு குறித்து சரியான கணிப்பை மேற்கொள்ளத் தவறியுள்ளதாகவும் யங்கர் குறிப்பிட்டார். இதனால், ஆரம்ப கட்டத்தில் இருந்த மூலோபாய முன்னிலை அமெரிக்காவிடம் இருந்து மெல்லக் குறைந்து வந்துள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

ஈரானின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து அவர் மேலும் கூறியதாவது, கடந்த ஜூன் மாதத்திலிருந்தே ஈரான் தனது முக்கிய இராணுவ வளங்களை ஒரே இடத்தில் வைத்திருக்காமல், பல பகுதிகளாகப் பிரித்து (dispersal strategy) அமைத்திருந்தது. இதனுடன், ஆயுதங்களைப் பயன்படுத்தும் அதிகாரத்தையும் பரவலாக்கியிருந்தது. இந்த அணுகுமுறை, அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்கிடையே கூட ஈரான் தன்னுடைய இராணுவ திறனை நிலைநிறுத்த உதவியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, இந்த மோதலை அமெரிக்கா ஒரு மூலோபாயத் தெரிவாக அணுகியிருக்கலாம்; ஆனால் ஈரான் இதனை தனது தேசிய அடையாளம், நாகரிகம் மற்றும் இருப்பை பாதுகாக்கும் போராட்டமாகக் கருதுகிறது. இந்த மனப்பாங்கு, ஈரானிய மக்களுக்கும் இராணுவத்திற்கும் அதிகமான மன உறுதியை வழங்கியுள்ளதாகவும் யங்கர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்துப்படி, இந்த மதிப்பீடு மத்திய கிழக்கு மோதலின் எதிர்கால திசையைப் பற்றிய முக்கிய எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது. போரின் நீடிப்பு மற்றும் அதன் கட்டுப்பாடு யாரிடம் உள்ளது என்பது உலகளாவிய அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது.