திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 39 வயதான ஆர்.கோகுலேஸ்வரன், வரவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியப் பிரஜையாக முதன்முறையாகத் தனது வாக்கைப் பதிவு செய்யவுள்ளார். தனது குடும்பத்தின் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிய ஒரு நம்பிக்கையாக அவர் இதனைக் கருதுகிறார்.
இது தொடர்பான முக்கிய விபரங்கள் வருமாறு:
இந்திய அடையாளத்தை உறுதிப்படுத்துதல்:
“நான் 1986 பெப்ரவரி 9 அன்று திருச்சியில் பிறந்தேன்; இங்கேயே கல்வியும் கற்றேன். இந்தியப் பிரஜையாக எனது அடையாளத்தை உறுதிப்படுத்த விரும்புவதால் எனது வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தேன். இந்த குடியுரிமை எனது பிள்ளைகளின் எதிர்காலத்தை மேம்படுத்தும் என்பதோடு, குடியுரிமை நடைமுறைகள் குறித்துத் தெரியாத என்னைப் போன்ற மற்றவர்களுக்கும் இது ஒரு உத்வேகமாக அமையும்” என கோகுலேஸ்வரன் ‘தி ஹிந்து’ (The Hindu) இதழிடம் தெரிவித்தார்.
கடவுச்சீட்டு பெறுவதில் உள்ள சிக்கல்:
குடியுரிமை கிடைத்து வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், அவரது இந்தியக் கடவுச்சீட்டு (Passport) விண்ணப்பம் தாமதமாகி வருவது அவருக்குக் கவலையை அளித்துள்ளது.
1987 ஜூலை 1 ஆம் திகதிக்கு முன்னர் இந்தியாவில் பிறந்தவர் என்பதால், அவர் பிறப்பிலேயே இந்தியப் பிரஜையாகக் கருதப்படுகிறார்.
எவ்வாறாயினும், அவரது பதிவுகளில் ‘குற்றவியல் வழக்கு’ ஒன்று இருப்பதாகக் கூறி அதிகாரிகள் கடவுச்சீட்டை வழங்க மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக 2024 இல் அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, அவர் 1955 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியப் பிரஜை என்பதை உறுதிப்படுத்தி, 8 வாரங்களுக்குள் கடவுச்சீட்டை வழங்குமாறு 2025 ஒக்டோபரில் உத்தரவிட்டது. இருப்பினும், ஒரு பல்பொருள் அங்கடியில் பணிபுரியும் அவருக்கு இதுவரை கடவுச்சீட்டு கிடைக்கவில்லை.
ஏனையோரின் நிலை:
இதே முகாமில் வசிக்கும் கோகுலேஸ்வரனின் மைத்துனி கே. நளினி (40), கடந்த 2024 ஆம் ஆண்டு முதன்முறையாக வாக்களித்துச் செய்திகளில் இடம்பெற்றவர்.
ஆனால், தற்போது வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளதால், அவர் மீண்டும் விண்ணப்பிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால் தான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முகாம் குடியிருப்பாளர்களின் குடியுரிமை முயற்சிகளை ஒருங்கிணைக்கும் மதினி (40) என்பவர் கூறுகையில்:
“இங்கு 1990 க்கு முன்னர் வந்த 25 அகதி குடும்பங்கள் உள்ளன. தஞ்சம் கோரி இந்தியா வந்தபோது தொலைந்துபோன அல்லது அழிந்துபோன அடையாளச் சான்றுகளைச் சமர்ப்பிக்குமாறு எங்களை அதிகாரிகள் கேட்கின்றனர். எங்களில் சிலர் இந்த முகாமிலேயே 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவிட்டனர், இன்னும் சிலர் இந்தியக் குடியுரிமைக்காகக் காத்திருந்தே இறந்துவிட்டனர்.”

