உலகக் கிண்ணம் தான் எங்களது முக்கிய கவனமாக இருக்கும் என்றும் பலம்வாய்ந்த அணிகளை வீழ்த்தும் குறிக்கோளுடன் இலங்கை மகளிர் அணியைக் கட்டி எழுப்புவேன் என இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநர் அவுஸ்திரேலியரான ஜெமி சிடன்ஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ரி20 உலகக் கிண்ணத்தில் எங்களுக்கு கடுமையான போட்டிகள் காத்திருக்கின்றன. பலசாலிகளை வெற்றிகொள்வதுதான் கிரிக்கெட்டில் சிறந்ததாகும். எனவே வெற்றிகளை குறிவைத்து இலங்கை மகளிர் அணியைத் தயார்படுத்துவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள 10ஆவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் வரவேற்பு நாடான இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளுடன் குழு 2இல் இலங்கை இடம்பெறுகிறது.
இந்த உலகக் கிண்ணத்தின் ஆரம்பப் போட்டியில் இங்கிலாந்தை ஜூன் 12ஆம் திகதி பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் இலங்கை எதிர்த்தாடவுள்ளது.
‘இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வெற்றிகொள்வது கடினமானதாகும். அதேவேளை, மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து ஆகிய அணிகளும் தரமானவையாகும். இந்த மூன்று அணிகளை இலக்கு வைத்துதான் வீராங்கனைகளை பயிற்சிகளில் ஈடுபடச் செய்வேன்’ என ஜெமி சிடன்ஸ் கூறியுள்ளார்.
உலகக் கிண்ணத்திற்கு முன்னர் பங்களாதேஷுக்கு எதிரான தொடர்களில் இலங்கை மகளிர் அணி விளையாடவுள்ளது. இந்தத் தொடர்கள் இலங்கை வீராங்கனைகளின் திறமையையும் புதியவர்களின் ஆற்றல்களையும் பரீட்சிப்பதாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

