தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை – வைகோ

0
11
Article Top Ad

”தமிழகத்தில் ஸ்டாலினின் ஆட்சி தான் அமையும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சிற்கு இடமில்லை ” என மதிமுகவின் பொதுச்செயலாளரான வைகோ பேசியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக எதிர்வரும் 23 ஆம் திகதியன்று பொது தேர்தல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும், கட்சியின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே. என். நேருவை ஆதரித்து திருச்சி உறையூர் பகுதியில் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளரான வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதில் அவர் பேசியதாவது….

நான் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதற்காக என்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்தவன். ஐந்தரை ஆண்டு காலம் சிறையில் இருந்தவன்.

6000 கிலோ மீற்றர் தொலைவிற்கு நடைபயணம் மேற்கொண்டவன். ஸ்டெர்லைட்காக போராடியவன். தூத்துக்குடியில் 13 உயிர்களை காவு வாங்கியவர் எடப்பாடி பழனிச்சாமி. ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் ஏஜென்ட்டாக புரோக்கராக… எடப்பாடி மாறியதால் தான் அந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அதே போல் சாத்தான் குளத்திலும் தந்தை – மகன் அடித்து கொல்லப்பட்டதற்கும் அப்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுதான் பொறுப்பு.

உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆணவத்துடன் திமுகவை வேருடன் பிடுங்கி எறிவேன் என்கிறார். இதே போல் அண்ணாமலையும் கூறுகிறார். யாராலும் அதை செய்ய முடியாது. திமுக தியாகத்தால் கட்டப்பட்ட கோட்டை. 75 ஆண்டு கால பாரம்பரிய திமுகவை தோற்கடிப்போம் என பேசினால்… அது ஜனநாயக உரிமை. ஆனால் மண்ணுடன் கலந்திருக்கக்கூடிய இயக்கத்தை வேருடன் பிடுங்கி அழிப்போம் என்கிறார்கள். இது நடக்காது.

திராவிட இயக்கத்தை நெஞ்சில் சுமப்பவன் நான். கலைஞருக்கு பக்கபலமாக எவ்வாறு நான் நின்றேனோ உற்ற துணையாக இருந்தேனோ அதேபோல் ஸ்டாலினுக்கும் இருப்பேன் என கலைஞரிடத்தில் உறுதி அளித்துள்ளேன்.

இந்த இயக்கத்தை சாய்ப்பதற்கு சனாதன சக்திகளும், அதன் வெறிபிடித்த கூட்டமும் இங்கே நுழைந்து விடக்கூடாது. அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழ்நாடு. தளபதி ஸ்டாலினின் நிர்வாகத்தில் இந்துக்கள்- இஸ்லாமியர்கள்- கிறித்தவர்கள்- என அனைவரும் சகோதரர்களாக வாழக்கூடிய சூழல் உள்ளது. வடநாட்டில் ரத்த களரிகள் ஏற்படுவதை போல் தமிழ்நாட்டிலும் ஏற்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்ற கூட்டத்தை தடுத்து, அதனை தகர்த்து தவிடு பொடியாக்க வேண்டிய கடமை எனக்கும் உண்டு.

சுயமரியாதை, சமூக நீதி ,சமத்துவம், சகோதரத்துவம் ,மதச்சார்பின்மை , கூட்டாட்சி கருத்தியல் கொண்ட இயக்கம் தான் திராவிட மாடல். இந்த ஆட்சியை நடத்துகிற இயக்கம் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் – கட்டணம் இல்லா மகளிர் விடியல் பயணம் – முதல்வர் காலை உணவு திட்டம் -புதுமைப்பெண் -தமிழ் புதல்வன்- நான் முதல்வன் -மக்களை தேடி மருத்துவம் -என பல்வேறு திட்டங்களை அறிவித்த நமது முதல்வரை.. இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் இருக்கக்கூடிய முதல்வர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை பின்பற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே என் நேரு கலைஞர் பேருந்து முனையும் -காய்கறி சந்தை- டைடல் பார்க் என பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ளார். அதனால் அவர் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

தமிழ்நாட்டிற்கு எந்த மாநிலங்களிலும் இல்லாத புதிய மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்தது ஸ்டாலின் தலைமையிலான அரசு. எனவே அந்த அரசு நீடிப்பதற்கான தீர்ப்பை தான் தமிழக மக்கள் வழங்குவார்கள். எங்கு திரும்பினாலும் உதயசூரியன் என்ற குரல் தான் கேட்கிறது. மீண்டும் ஸ்டாலின் தான் முதல்வராக பொறுப்பேற்பார். தமிழகத்தில் அடுத்து அமையப்போவது ஸ்டாலினின் திமுக தலைமையிலான ஆட்சி தான். கூட்டணி ஆட்சி அல்ல. அந்த நிலையை மக்கள் ஒருபோதும் ஏற்படுத்த மாட்டார்கள்” என பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here