அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இன்று (21) அதிகாரப்பூர்வ பயணமாக பாகிஸ்தான் செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த பயணம், மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய அரசியல் சூழ்நிலையை மையமாகக் கொண்ட முக்கியமான தூதரக நகர்வாக பார்க்கப்படுகிறது.
தகவல்களின் படி, இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் நாளை (22) இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ள அமெரிக்கா–ஈரான் இடையிலான இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதாகும். இந்த பேச்சுவார்த்தைகள், இரு நாடுகளுக்கிடையிலான பதற்றத்தை குறைத்து, தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.
அதேவேளை, ஈரான் தரப்பில் இருந்து இந்த பேச்சுவார்த்தையில் தங்களது பிரதிநிதிகள் குழு பங்கேற்பதை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தையின் வெற்றி குறித்து சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு மற்றும் சந்தேகம் இரண்டும் நிலவுகின்றன.
இந்த சூழ்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை (22) முடிவடையவுள்ளதால், இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது. போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா அல்லது மீண்டும் பதற்றம் அதிகரிக்குமா என்பது இந்த சந்திப்பின் முடிவைப் பொறுத்ததாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
முன்னதாக கடந்த 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்தவிதமான உறுதியான உடன்பாடும் இல்லாமல் தோல்வியில் முடிந்தது. அதனால் இந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மீது கூடுதல் கவனம் திரும்பியுள்ளது.
இந்த உயர்மட்ட தூதரக முயற்சி பிராந்திய பாதுகாப்பு, எண்ணெய் சந்தை நிலைமை மற்றும் உலக அரசியல் சமநிலைக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக பார்க்கப்படுகிறது.

