திமுக மீண்டும் ஆட்சியமைக்கிறது – த.வெ.கவின் நிலை என்ன?

0
2
Article Top Ad

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் (Exit Polls) நேற்றுமுதல் வெளியாகத் தொடங்கியுள்ளன. இந்தக் கணிப்புகள் அரசியல் சூழலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

வாக்குப்பதிவு முடிந்த உடனே வெளியிடப்படும் இந்தக் கணிப்புகள், மக்களின் வாக்கு நடத்தை மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்த ஒரு ஆரம்பக் கண்ணோட்டத்தை வழங்குகின்றன என்றாலும், அவை இறுதி முடிவுகளை உறுதி செய்யாது.

பெரும்பாலானக் கணிப்புகள் படி, திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான (தி.மு.க.) கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக NDTV, Matrix, Republic B Mark, Chanakya போன்ற நிறுவனங்கள் தி.மு.க. கூட்டணி 125 க்கும் மேற்பட்டத் தொகுதிகளில் வெற்றி பெறும் என மதிப்பிட்டுள்ளன.

நகர்ப்புறங்கள் மற்றும் சில வடக்கு மாவட்டங்களில் தி.மு.க.க்கு வலுவான ஆதரவு தொடர்ந்திருப்பதாகவும் இந்தக் கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதே நேரத்தில், அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் ஒரே திசையில் இல்லை. இதற்கு மாறாக, CNN, Times Now, JVC, Votewipe போன்ற சில நிறுவனங்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) தலைமையிலான கூட்டணி 128 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என கணித்துள்ளன.

சில மாவட்டங்களில் கடுமையானப் போட்டி நிலவியதாலும், வாக்குகள் சிதறியிருப்பதாலும் முடிவுகள் மாறக்கூடிய சூழல் உருவாகியுள்ளது எனவும் கூறப்படுகிறது. இதனால் தேர்தல் முடிவுகள் குறித்து இன்னும் உறுதியான நிலை இல்லை என்பது தெரியவருகிறது.

இதற்கிடையில், புதிய அரசியல் சக்தியாக கருதப்படும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அதிகபட்சமாக 24 இடங்களில் வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் வாக்காளர்கள் மற்றும் சில நகர்ப்புற பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் குறிப்பிடத்தக்க ஆதரவை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி குறித்த கணிப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு கிராமப்புறங்களில் ஓரளவு செல்வாக்கு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி அதிகபட்சமாக 0 முதல் 6 இடங்கள் வரை மட்டுமே பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், பல தொகுதிகளில் வாக்கு சதவீதத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டிருக்கலாம் எனவும் மதிப்பீடுகள் கூறுகின்றன.

பல்வேறு கருத்துக் கணிப்புகள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட முடிவுகளை வெளியிட்டுள்ளதால், தமிழக அரசியல் சூழல் தற்போது மிகுந்த எதிர்பார்ப்புடன் காணப்படுகிறது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் (Exit Polls) பொதுவாக மாதிரி வாக்கு அடிப்படையில் கணிக்கப்படுவதால் அவை தவறக்கூடிய வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி 400 இடங்கள் வரை வெற்றிபெறும் எனக் கூறப்பட்ட போதிலும், தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மையைக்கூட பாஜகவால் பெற முடியாது போனது.

எனவே, இறுதி உண்மையான முடிவுகள் தேர்தல் ஆணையம் வெளியிடும் அதிகாரப்பூர்வ எண்ணிக்கைகள் மூலம் மட்டுமே உறுதி செய்யப்படும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here