இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொள்ள பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தேசிய சுகாதார சேவையை நவீனமயமாக்கல் சட்டத்தின் ஊடாக இந்த புதிய மறுசீரமைப்பு பணிகளை அரசாங்கம் செய்ய உள்ளதுடன், இந்த மறுசீரமைப்பின் மூலம் தற்போதைய நிர்வாக அமைப்புகளில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தேசிய சுகாதார சேவை அமைப்பு இரத்து செய்யப்பட்டு அதன் அதிகாரங்கள் நேரடியாக சுகாதார மற்றும் சமூகப் பராமரிப்புத் துறைக்கு மாற்றப்படவுள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம் நிர்வாகச் செலவுகளை கணிசமாக குறைக்கவும், சுகாதாரத் தீர்மானங்களை விரைவாக எடுக்கவும், சேவைகளை ஒருங்கிணைக்கவும் முடியும் என அரசாங்கம் நம்புகிறது.
பல ஆண்டுகளாக சுகாதாரத் துறையில் காணப்பட்ட நிர்வாக சிக்கல்கள் மற்றும் நீண்டகால தாமதங்களை குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.
மேலும், அனைத்து நோயாளிகளின் மருத்துவ தகவல்களையும் ஒருங்கிணைக்கும் “ஒற்றை நோயாளி பதிவு” எனப்படும் புதிய டிஜிட்டல் மருத்துவ பதிவு அமைப்பும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த அமைப்பின் மூலம், நோயாளியின் மருத்துவ வரலாறு, பரிசோதனை முடிவுகள், மருந்து விவரங்கள் மற்றும் சிகிச்சைத் தகவல்கள் அனைத்தும் ஒரே மையப்படுத்தப்பட்ட கணினி அமைப்பில் பதிவு செய்யப்படும்.
இந்த டிஜிட்டல் மாற்றம் மருத்துவ சேவைகளை மக்களுக்கு எளிதாகும் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

