கால்இறுதி போட்டி இன்று தொடக்கம் : பிரேசில் – குரோஷியா பலப்பரீட்சை!

0
106
Article Top Ad

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கிய இந்த போட்டி தற்போது விறு விறுப்பான நிலைக்கு சென்றுள்ளது.

32 நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்றன. கடந்த 2-ந்தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் 16 நாடுகள் ‘நாக் அவுட்’ சுற்றுக்கு முன்னேறின. 2-வது சுற்று ஆட்டங்கள் 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடந்தது.

2-வது சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், 5 முறை உலக கோப்பையை வென்ற பிரேசில், 2 தடவை சாம்பியனான அர்ஜென்டினா, 1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து, 3 முறை 2-வது இடத்தை பிடித்த நெதர்லாந்து, கடந்த முறை 2-வது இடத்தை பிடித்த குரோஷியா, 1966-ம் ஆண்டு 3-வது இடத்தை பிடித்த போர்ச்சுக்கல், ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மொராக்கோ ஆகிய 8 நாடுகள் கால் இறுதிக்கு முன்னேறின.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, போலந்து, செனகல், ஜப்பான், தென் கொரியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகியவை 2-வது சுற்றில் வெளியேற்றப்பட்டன.

2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு கால் இறுதி ஆட்டங்கள் நாளை (9-ந்தேதி) தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை 2 கால் இறுதியும், சனிக்கிழமை 2 கால் இறுதி ஆட்டமும் நடக்கிறது.

நாளை இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் கால் இறுதி ஆட்டத்தில் பிரேசில்-குரோஷியா அணிகள் மோதுகின்றன. அல்ரையானில் உள்ள எஜிகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடக்கிறது.

பிரேசில் அணி ‘லீக்’ ஆட்டங்களில் செர்பியாவை 2-0 என்ற கணக்கிலும், சுவிட்சர்லாந்தை 1-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது.

கேமரூனிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. 2-வது சுற்று ஆட்டத்தில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. அந்த அணி 7 கோல்கள் போட்டுள்ளன. 2 கோல்கள் வாங்கியுள்ளது.

பிரேசில் அணி குரோஷியாவை வீழ்த்தி 12-வது முறையாக அரை இறுதிக்குள் நுழையும் ஆர்வத்தில் இருக்கிறது. ஜெர்மனி அணி தான் அதிகபட்சமாக 13 தடவை அரைஇறுதிக்கு நுழைந்து இருந்தது. 4 முறை சாம்பியனான அந்த அணி கடந்த 2 உலக கோப்பையிலும் ‘லீக்’ சுற்றிலேயே வெளியேறியது.

கடந்த உலக கோப்பையில் பிரேசில் அணி கால் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்று இருந்தது. அது மாதிரியான நிலைமை தற்போது வந்து விடக் கூடாது என்பதில் அந்த அணி கவனமாக இருக்கும்.

உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பிரேசில் அணியில் பல நட்சத்திர வீரர்கள் உள்ளனர். ரிச்சர்லிசன் 3 கோல் அடித்து முத்திரை பதித்து உள்ளார்.

நெய்மர், வின்சியஸ் ஜூனியர், கேசிமிரோ, கேப்டன் தியோகோ சில்வா போன்றோரும் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் முதன்மையாக கருதப்படும் பிரேசில் அணி குரோஷியாவை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும். அந்த அணி இதுவரை குரோஷியாவிடம் தோற்றது இல்லை.

குரோஷியா அணி 3-வது முறையாக அரை இறுதிக்கு நுழையும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி இதுவரை தோல்வி எதையும் தழுவவில்லை. குரூப் போட்டிகளில் கனடாவை 4-1 என்ற கணக்கில் வென்றது. மொராகோ, பெல்ஜியத்து டன் கோல் எதுவுமின்றி ‘டிரா’ செய்தது

2-வது சுற்றில் பெனால்டி ஷீட் அவுட்டில் ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. குரோஷியா அணியில் கேப்டன் மாட்ரிச், பெரிசிக் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் பிரேசில் 3-ல் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் டிரா ஆனது. 2006 உலக கோப்பையில் 1-0 என்ற கோல் கணக்கிலும், 2014 உலக கோப்பையில் 3-1 என்ற கணக்கிலும் பிரேசில் வெற்றி பெற்று இருந்தது.

நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதியில் அர்ஜென்டினா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.