27 வருட மணவாழ்க்கையை முறித்துக்கொள்ளும் பில்கேட்ஸ்-மெலின்டா தம்பதி

0
395
Article Top Ad

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் அடிக்கடி உச்சரிக்கப்படும் அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான பில் கேட்ஸ் விவாகரத்து செய்யவுள்ள செய்தி சர்வதேச செய்தி
ஸ்தாபனங்களின் முக்கிய செய்தியாக மாறியுள்ளது.

இந்த விவகாரத்து அறிவிப்பிற்கு முன்னர் வெளியான தரவுகளுக்கு அமைவாக பில்கேட்ஸ் உலகின் நான்காவது மிகப்பெரிய பணக்காரர். அவரது சொத்துமதிப்பு 124 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

பில் கேட்ஸ் – மெலின்டா கேட்ஸ் தம்பதியினர் உலகளவில் மிகப்பெரிய பணக்கார தம்பதி என்பதற்காக மட்டுமன்றி மிகப்பெரிய நன்கொடையாளர்கள் என்றவகையிலும் பிரபல்யமானவர்கள் .

ஆனால் இனியும் திருமணவாழ்வில் முன்செல்வதற்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து 27 ஆண்டுகால திருமணவாழ்வை முடிவிற்கு கொண்டுவரத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

கடந்த 1975ம் ஆண்டு பால் ஆலன் உடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கிய காலத்தில் அதன் தலைமை செயல் அதிகாரியாக பில் கேட்ஸ் செயற்பட்டார்.

அதன்பின், அதன் தலைவர் மற்றும் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர் ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளார்.

அந்நிறுவனத்தில் முகாமையாளராக பணிபுரிந்த மெலிண்டா கேட்சை சந்தித்து பில் கேட்ஸ் பின்னர் ஹவாயில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் 6 ஆண்டுகள் கழித்து, கடந்த 2000ம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பெயரில் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது.

இலாபநோக்கு இல்லாத இதன் வழியே கல்வி, பாலின சமத்துவம் மற்றும் சுகாதார நலம் போன்ற சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், இந்த தம்பதி 27 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர். இதுதொடர்பாக பில் கேட்ஸ் தம்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதனால் அனைத்துத் தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான வழிகள் செய்து வரப்பட்டுள்ளன.

இந்த பணியில் இணைந்து தொடர இருக்கிறோம். எனினும், எங்களது திருமண வாழ்வை முடித்துக் கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளனர்.