வீரர்களின் பலருக்கு கொரோனா எதிரொலி :ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி இடைநிறுத்தம்

0
342
Article Top Ad

 

வீரர்கள் பலருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் ) போட்டிகள் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் தினமும் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகி வந்த நிலையிலும் கடந்த சில வாரங்களாக நடந்துவந்தன. இதற்கு ஒரு தரப்பில் இருந்து கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

இந்தியாவில் 14 ஆவது ஐபிஎல் சீசன் நடைபெற்று வந்த நிலையில், நேற்று நடைபெறவிருந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்டது, ஐபிஎல் வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நேற்றிரவு போட்டி நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் கொல்கத்தா அணியைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி  மற்றும் சந்தீப் வாரியார் ஆகியோர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டனர்.

அது மட்டுமில்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் விருதிமான் சாஹா ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

டெல்லி கேபிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ராவுக்கும் தொற்று உறுதியானது.

பிசிசிஐ நிலையான வழிகாட்டுதலின்படி, கொரோனாவில் பாதிக்கப்பட்ட ஒருவருடன் வீரர்கள் யாரேனும் தொடர்பில் இருந்திருந்தால், அவர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், 3 முறை நடக்கும் கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வர வேண்டும்.

ஏற்கெனவே சிஎஸ்கே வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இப்போது மேலும் 3 அணிகள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படும்போது, போட்டிகளைத் தொடர்ந்து நடத்துவது இயலாது என்பதால், ஐபிஎல் டி20 தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், ‘2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 சீசன் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

ஒவ்வொரு அணி நிர்வாகத்தினர், ஒளிபரப்பாளர்களுடன் பேசி வருகிறோம். நாட்டில் உள்ள சூழல், மக்கள் மனநிலை ஆகியவற்றைக் கவனிப்பதால், தற்காலிகமாக ஐபிஎல் தொடரை ஒத்திவைக்கிறோம்.

இந்த மாதத்தில் ஐபிஎல் தொடரை நடத்த வாய்ப்பில்லை.

வீரர்களின் உடல்நிலை பிசிசிஐக்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். விரைவில் மீண்டும் கூடி தொடர் குறித்தும், எப்போது தொடரை முடிப்பது என்றும் முடிவு செய்வோம்’ எனத் தெரிவித்தார்.