பணவீக்கம் குறைந்தாலும் பொருட்களின் விலைகள் குறையவில்லை!

0
78
Article Top Ad

நாட்டில் தொடர்ச்சியாக பணவீக்கம் குறைவடைந்துவருவதாக அரசாங்கம் கூறிவந்தாலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவதில்லை என பொது மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 35 வீதமாகவும் மே மாதத்தில் 25 வீதமாகவும் ஜூன் மாதத்தில் 12 வீதமாகவும் அதாவது இலங்கையின் பணவீக்கம் கடந்த மூன்று மாதங்களில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.

பணவீக்கம் தொடர்ச்சியாக குறைவடைந்து வந்தாலும், பொருட்களின் விலைகள் குறைவடைவதில்லை. மக்களும், நுகர்வோர் சங்கங்கத்தினரும் தொடர்ச்சியாக இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

பணவீக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பொருட்களின் விலையில் அதிகரிப்பை ஏற்படுத்துவதாகும். கடந்த ஜூன் மாதம் 12 வீதமாக பணவீக்கம் குறைவடைந்துள்ளதாக அரசாங்கம் கூறியுள்ள போதிலும் கடந்த ஆண்டும் ஜுன் மாதத்தைவிட இவ்வாண்டு ஜுன் மாதத்தில் பொருட்களின் விலைகள் 12 வீதம் அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பணவீக்கம் குறைந்துள்ளதால் உண்மையில் இலங்கையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டும். ஆனால், அதனை சாத்தியப்படுத்துவதற்கான திட்டங்கள் எதனையும் அரசாங்கம் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.

கொவிட் தொற்றின் பின்னர் இலங்கை மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் மற்றும் மக்கள் எழுச்சிப் போராட்டங்களால் பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடைந்ததுடன், மக்கள் தமது உணவுத் தேவையைக்கூட பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

என்றாலும், அரசாங்கத்தின் இறுக்கமான இறக்குமதி கட்டுப்பாடுகள், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையின் பிரகாரம் அதிகரிக்கப்பட்ட வரி வீதங்கள், கடன் மறுசீரமைப்புத் திட்டங்களால் நாட்டின் அந்நிய கையிருப்பு அதிகரித்துள்ளது.

அதேபோன்று மத்திய வங்கியின் நீண்டகால இலக்கை கொண்ட வட்டிவீதங்களும் நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து ஓரளவு மீட்டுள்ளது.

டொலர் ஒன்றின் மதிப்பு கடந்த ஆண்டு ரூ.371 வரை அதிகரித்திருந்தது. ஆனால், கடந்த மே மாதம் டொலரின் மதிப்பு ரூ.285 வரை குறைந்து மீண்டும் இலங்கை ரூபா வலுவடையத் தொடங்கியது. தற்போது மீண்டும் 320 ரூபாவை எட்டியுள்ள போதிலும் கடந்த ஆண்டைவிட ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் வினைத்திறனான முகைமைத்துவத்தால்தான் இந்த சாதகமான சூழலை எட்ட முடிந்துள்ளது.

எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்ற பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான அனைத்துக் காரணிகளும் தற்போது குறைந்துள்ளன. எனவே, அதன் பலனை மக்களுக்கு அளித்து, பொருட்களின் விலையை குறைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

பணவீக்கமானது இந்த மாதத்தில் ஒற்றை இலக்கத்தை அடையுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் முதல்வாரத்தில் வாகனங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டிருந்தார்.

ஆகவே, தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தின் சாதகமான பிரதிபலன்களை பொது மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளையும், உரிய பொறிமுறைகளையும் உருவாக்க வேண்டும்.

வர்த்தக நிலையங்கள் மற்றும் மொத்த விநியோகஸ்தர்கள் குறித்து கூடிய அவதானத்தை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை செலுத்துவதன் ஊடாக சந்தையில் மிகவும் உயர்வான நிலையில் காணப்படும் பொருட்களின் விலைகளை குறைக்க முடியும். இதுவே, பொது மக்களின் எதிர்ப்பார்ப்பும்.