கனடாவில் புதிதாக இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட தமிழரான கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree)அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.கனடாவின் அரசு பழங்குடியின உறவுகளுக்கான (Crown-Indigenous relations) அமைச்சராகவே கரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சத்தியசங்கரி ஆனந்தசங்கரி என்ற இயற்பெயரைக் கொண்ட கரி ஆனந்த சங்கரி இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவருமான வீ. ஆனந்த சங்கரியின் இரண்டாவது மகனாவார்.
கனடாவின் ஆளும் லிபரல் கட்சி அரசாங்கத்தின் மீதும் குறிப்பாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீதும் மக்கள் செல்வாக்கு பெரிதும் குறைவடைந்து வருவதாக அண்மைய கருத்துக்கணிப்புக்கள் இடம்பெற்ற நிலையில் கடந்த சில வாரகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
கடந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த எழு அமைச்சர்கள் தமது பொறுப்புக்களில் இருந்து முற்றுமாக விடுவிக்கப்பட்டதுடன் இன்னமும் பல அமைச்சர்களின் பொறுப்புக்கள் மாற்றப்பட்டன. புதிய நியமனங்களும் இடம்பெற்றன.
இந்த புதிய நியமனங்களில் கரி ஆனந்தசங்கரி அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டமை உலகெங்கும் பரந்துவாழ்கின்ற தமிழ் மக்களுக்கு குறிப்பாக இலங்கைத்தமிழர்களுக்கு பெருமையும் நம்பிக்கையும் அளிக்கும் செய்தியாகும்.
இலங்கையில் பிறந்த கரி ஆனந்தசங்கரி, தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜுலை இனக்கலவரம் இடம்பெற்ற 1983ம் ஆண்டில் தனது 10வது வயதில் தனது தாயாருடன் கனடாவிற்குப் புலம்பெயர்ந்தார்.ரொறன்ரோவில் உள்ள ஓஸ்குட் ஹால் சட்ட கல்லூரியில் சட்டம் பயின்று 2006 இல் பட்டம் பெற்றார். பின்னர் ரொறன்ரோவில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.கனடிய லிபரல் கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்தார். புதிதாக உருவாக்கப்பட்ட Scarborough- Rouge Park தொகுதியில் அக்கட்சியின் சார்பில் 2015 அக்டோபர் 19 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அவரை எதிர்த்து போட்டியிட்ட பழைமைவாதக் கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்து நாடாளுமன்றம் சென்றார்.
கரி ஆனந்தசங்கரி, ஹரிணி சிவலிங்கம் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு பைரவி, சகானா என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
And it looks like coming into cabinet, Gary Anandasangaree. pic.twitter.com/o8u0jYC5Ly
— Xiaoli XCX / 李肖黎 (@Xiaoli_XCX) July 26, 2023
தமது கடும் உழைப்பிற்காகவும் கல்விக்கான முக்கியத்துவத்திற்காகவும் உலகில் பெரிதும்மதிக்கப்படுகின்ற சமூகங்களில் ஒன்றாக திகழம் இலங்கைத்தமிழர்கள் தமதுசொந்தநாட்டில் உரிமைகள் மறுக்கப்பட்டு நாளும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு இரண்டாந்தரக் குடிமக்களாக நடாத்தப்படுகின்ற நிலையில் கரி ஆனந்தசங்கரி G-7 அமைப்பில் இடம்பெற்றுள்ள உலகின் முக்கியமிக்க நாடுகளில் ஒன்றான கனடாவில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை பெருநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாக தொடர்ந்தும் இடைவிடாது குரல்கொடுத்தும் துணிச்சலோடு செயற்பட்டும் வருபவர் கரி ஆனந்த சங்கரி. அண்மையில் 1983 ஜுலை இனக்கலவரத்தின் 40ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டும் விசேட நிகழ்வுகளை ஏற்பாடுசெய்ததுடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடனான சந்திப்பையும் நெறிப்படுத்தியிருந்தார். அதுமட்டுமன்றி கனடா அரசாங்கத்தின் இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பான உறுதிப்பாடான நிலைப்பாடுகளின் பின்னணியில் செயற்படும் முக்கிய சக்தியாகவும் கரி ஆனந்த சங்கரி திகழ்கின்றார் .
Today, in Ottawa, we discussed the profound impact of Black July on the Tamil community in Canada, and lack of accountability.
Let us continue to listen, learn, and share our stories, drawing strength from our struggles and shared experiences. pic.twitter.com/VmfmSANUmP
— Gary Anandasangaree (@gary_srp) July 24, 2023