’13 ஐ’ நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதியின் இலக்கு சாத்தியமாகுமா? இன்று சர்வக்கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?

0
52
Article Top Ad

13ஆவது திருத்தச்சட்டம் தமிழ் மக்களுக்கானது மாத்திரமல்ல முழு நாட்டுக்குமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுவரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கை பிரதிநிதித்துவப்படும் தமிழ் கட்சிகள் அனைத்தும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதுடன், ஜே.வி.பியை தவிர்த்து நாட்டின் ஏனைய பிரதானக் கட்சிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளன.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளின் எம்.பி.க்களுடன் மட்டும் கலந்துரையாடுவது போதுமானதல்ல. இது நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் ஜனாதிபதி கூறினார்.

ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாண சபைகள் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்கள் என்றும், எதிர்காலத்தில் மாகாணசபை முறைமையை நீடிக்க வேண்டுமானால் தற்போதுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியமானது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

13ஆவது திருத்தச்சட்டத்தில் அதிகாரப் பகிர்வை வழங்கும் செயல்முறையுடன் மாகாண சபைத் தேர்தலையும் உடனடியாக நடத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென வடக்கின் தமிழ் கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளன.

சர்வக்கட்சி மாநாடு குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

”13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வை வழங்குவது குறித்தே ஜனாதிபதி இன்றைய மாநாட்டில் கருத்துகளை பகிர்ந்துக்கொண்டார்.

பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அதிகாரங்களை வழங்குவது குறித்து அவர் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனால், நாங்கள் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த வேண்டுமென கூறினோம். மாகாண தேர்தல் பற்றி பேசுவதா அல்லது அதிகாரப் பகிர்வு பற்றி பேசுவதா என்று முடிவெடுங்கள் என ஜனாதிபதி பதிலளித்திருந்தார்.

அவரது கருத்து முரண்பாடான கருத்தாக இருந்தது. தேர்தலை நடத்துவதற்கும் அதிகாரப் பகிர்வு பற்றிய பேச்சுகளை தொடர்வதற்கும் உள்ள முரண்பாடு என்னவென எமக்கு தெரியவில்லை. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புப்பட்ட விடயமாகும். மாகாண சபைகள் இயங்கும் போதுதான் அவற்றின் அதிகாரங்கள் பற்றி பேச முடியுமென நாம் வலியுறுத்தினோம்.

மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென நாம் உறுதியாக ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்“ என்றார்.

இதேவேளை, சர்வக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதுடன், தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான இருப்பை அடிப்படையாக கொண்டு இந்த விடயத்தை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டுமெனவும் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தமிழ் கட்சிகளின் நிலைப்பாடுகளை ஜனாதிபதி முழுமையாக ஏற்றுகொள்ளும் நிலைப்பாட்டில் இல்லையென தமிழ் எம்பிக்கள் கருத்துவெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டை பிளவுப்படுத்தும் எத்தகைய அதிகாரப் பகிர்வுக்கும் ஆதரவளிக்க மாட்டோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தலைமையில் இன்று மாலை சர்வக்கட்சி மாநாடு ஆரம்பமாகுவதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட சாகர காரியவசம்,

நாட்டை பிளவுப்படுத்தும் தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்தால் அதற்கு நாம் ஆதரவளிக்க மாட்டோம். ஜனாதிபதி நாட்டை பிளவுப்படுத்தும் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க மாட்டார் என நம்புகிறோம்” என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்து வெளியிடுகையில்,

“13ஆவது திருத்தச்சட்டம் பற்றி பேசுபவர்கள் எவரும் இருந்தால் அவர்கள் முதலில் மாகாண சபை தேர்தலை நடத்துமாறே கோரிக்கை விடுக்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் “13“ இருந்தும் வடக்கு மாகாண சபை இருக்கவில்லை. அவருக்கு பிறகும் மாகாண சபை இல்லை. ஆகவே, முதலில் தேர்தலை பற்றிதான் பேச வேண்டும்“ என்றார்.

”69 இலட்சம் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியானது, புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவருவதாகும். மாறாக 13 ஐ அமுல்படுத்துவதல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் இதனை கோருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியல்ல.

நாட்டில் அதிகாரப் பகிர்வு ஒரு பிரச்சினையல்ல. பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாண்பதே அவசியமாகவுள்ளது” – என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இந்தக் கூட்டத்தின் பின்னர் கூறினார்.