120,000 ஆண்டுகளில் இல்லாதளவு உலகம் முழுவதும் பல நாடுகள் வெப்பநிலை அதிகரிப்பின் தாக்கத்தை எதிர்கொண்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவையின் (ERA5) தரவுகள் தெரிவிக்கின்றன.
இம்மாதத்தின் கடந்த மூன்று வாரங்களும் கடுமையான வெப்பநிலை பதிவான வாரங்களாக உலக வரலாற்றில் பதிவாகியுள்ளதாக கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை கூறுகிறது.
ஜூலை மாதத்தில் கிரீஸ், இத்தாலி மற்றும் அல்ஜீரியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், மத்திய தரைக் கடலை ஒட்டிய நாடுகளும் அதிக வெப்பம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் பூமியின் வடக்கு அரைக்கோளத்திலும் வெப்ப அலைகள் வீசியுள்ளதாக கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை சுட்டிக்காட்டுகிறது.
கடந்த 120,000 ஆண்டுகளில் ஜூலை மாதமே மிகவும் வெப்பமான மாதமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இந்த அதீத வெப்பக்கு புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு காரணமாக இருக்குமென விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு குறித்து நேற்று கருத்து வெளியிடுகையில்,
உலகில் காற்று சுவாசிக்க முடியாததாகவும் வெப்பநிலை தாங்க முடியாததாகவும் மாறி வருகிறது. பூமிக்கு இது பேரழிவாக மாறியுள்ளது. உலகத் தலைவர்கள் இந்த விடயத்தை கரிசனையுடன் அணுகி இதற்கு தீர்வுகாண தமது தலைமைத்துவத்தை வழங்க வேண்டும்.
ஜூலை வெப்பநிலை அதிகரிப்பான கடுமையான பேரிடர் காலத்தக்கு ஈட்டுச்செல்லக்கூடும் எனக் கூறியுள்ளார்.
உலக வானிலை அமைப்பின் பொதுச்செயலாளர் பேராசிரியர் பீட்டரி தலாஸ், “வெப்பநிலை அதிகரிப்பானது ஜூலை மாதத்தில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதித்துள்ளது.
இது துரதிர்ஷ்டவசமானது. உலகளாவிய காலநிலை மாற்றத்தை அவதானத்துடன் அணுகும் எச்சரிக்கையாக இது உள்ளது. எதிர்காலம் மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம்” என எச்சரித்துள்ளார்.
120,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் பூமியின் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் இந்த அபாயத்தை உலகத் தலைவர் உணர்ந்து உலக வெப்ப நிலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும் வானிநிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்போதைய நிலை தொடரும் பட்சத்தில், 2040ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டுவதற்கு 50 வீதம் வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இது இன்னும் விரைவாக – அதாவது 2037ஆம் ஆண்டுக்குள் நிகழலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
“பாரிஸ் ஒப்பந்தம் உள்ளிட்ட பல உலகளாவிய ஒப்பந்தங்களும் பேச்சுவார்த்தைகளும் எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படுத்தப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.
காலநிலை மாற்றத்தின் தீவிரம் முன்னெப்போதையும்விட அதிகமாகியிருக்கிறது. உலகம் தொடர் பேரிடர்களால் பாதிக்கப்படுகிறது.
சிறிய முரண்களால் வேறுபடாமல் மனித இனத்தின் எதிர்காலத்தைக் காப்பதற்கு உலக நாடுகள் ஒன்றுகூட வேண்டும்“ என காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் (IPCC) 58ஆவது மாநாடு, சுவிட்சர்லாந்தின் இண்டர்லேகன் நகரத்தில் கடந்த மார்ச் நடைபெற்றிருந்த தருணத்தில் உலகளாவிய வெப்பநிலையை சமநிலையில் பேணுவதற்கான பன்னாட்டுக் குழுவின் ஆறாவது காலநிலை அறிக்கையும் (Sixth Assessment Report) வெளியிடப்பட்டிருந்தது.
அதிகரிக்கும் உலக வெப்பநிலையை தணிப்பதற்கான செயல்பாடுகளில் இலங்கையும் அதன் பங்களிப்பை வழங்குவதாக பாரிஸ் காலநிலை மாநாட்டில் உறுதியளித்திருந்தது.
கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையில் பாரிஸ் காலநிலை மாநாட்டின் முடிவுகளை அமுல்படுத்துவதாக உறுதியளித்திருந்ததுடன், கடந்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரான்ஸுக்கு சென்றிருந்த போதிலும் காலநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் அவதானம் செலுத்த வேண்டுமென அறிவித்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்து.