தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் மனைவியான மதிவதனி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக புலம்பெயர் நாட்டில் வசிக்கும் மதிவதனியின் சகோதரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மிக அண்மையில் குறித்த இருவரையும் சந்தித்ததாகவும், அவர்களுடன் உணவு உண்டதாகவும் டென்மார்க்கில் வசிக்கும் மதிவதனியின் சகோதரி காணொளி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை வெளியிடுவதில் மிகவும், மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள அவர், இறுதி யுத்தத்தின் போது இருவரும் உயிரிழந்து விட்டதாக இலங்கை அரசாங்கத்தாலும், ஊடகங்கள் மூலமாகவும் அறிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மிக அண்மையில் அவர்கள் இருவரும் உயிருடன் இருப்பதை அறிந்துகொண்டு, அவர்களை சந்தித்து வந்துள்ளதாக டென்மார்க்கில் வசிக்கும் மதிவதனியின் சகோதரி கூறியுள்ளார்.
இந்த செய்தியை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மகிழ்ச்சியாக தெரிவிப்பதாகவும், இது கடவுள் கொடுத்த வரமாக பார்ப்பதாகவும்” அவர் அந்த காணொளியில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இன்றளவிலும் போரின் சுவடுகளை வடக்கு, கிழக்கில் காண முடிந்துள்ளது.
இந்த யுத்தம் காரணமாக இரு தரப்பிலும் ஏராளமான உயிரிச் சேதங்கள் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்பட்டிருந்தன. அத்துடன், இறுதி யுத்ததின் போது பல்வேறு மனித உரிமைகள் மீறப்பட்டதாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.
மேலும், போர் நெறிமுறைகளை மீறி சரணடைந்தவர்கள் மீது குண்டு வீசியதாகவும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
படையினரிடம் சரணடைந்தவர்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் இதுவரையிலும் வெளிப்படுத்தப்படவில்லை. காணாமல் போனவர்களின் உறவினர்கள் நீதிகோரி இன்றும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
பிரபாகரன் உயிருடனே இருக்கிறார் – பழ.நெடுமாறன்
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவன் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் இந்த ஆண்டு முற்பகுதியில் தெரிவித்திருந்தார்.
பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருப்பதாகவும், அவர் உகந்த காலத்தில் மக்கள் முன் நிறுத்தப்படுவார் எனவும் தஞ்சையில் பழ. நெடுமாறன் கூறியிருந்தார்.
எனினும், பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை எனவும், அவ்வாறு உயிருடன் இருந்தால் நல்லது எனவும் பலரும் கூறியிருந்தனர்.
இந்நிலையில், பிரபாகரனின் மரணம் மர்மமாகவே நீடித்தது வருகின்றது.
பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்க மறுக்கும் இலங்கை அரசாங்கம்
இந்நிலையில், 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாக்கால், நந்திக்கடல் பகுதியில் நடந்த இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.
பிரபாகரனின் சடலத்தை விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களான விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா) மற்றும் தயா மாஸ்டர் ஆகியோர் அடையாளம் காட்டியிருந்தனர்.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டு 14 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இதுவரையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை இலங்கை அரசாங்கம் வெளியிடவில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன அரசாங்கத்திடம் கேட்டிருந்தார்.
எனினும், “தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்தத் தகவல்களை வழங்கினால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்” என்று குறிப்பிட்டு இலங்கை இராணுவமும், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சும் அந்த கோரிக்கையை நிராகரித்திருந்தது.
எவ்வாறாயினும், பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்ற விடயத்தை தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் அரசாங்கம் மூடி மறைத்து முழுப் பொய்களை செல்லி வருகின்றது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.
மனைவி மற்றும் மகளின் மரணத்தை உறுதிப்படுத்தவில்லை.
இதனிடையே, இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் மற்றும் அவரின் மகன் சாள்ஸ் அந்தனி ஆகியோரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டதாக இலங்கை இராணுவ ஊடகப் பேச்சாளர் ரவி ஹேரத் தெரிவித்தார்.
துவாரகா விவகாரம் தொடர்பில் இராணுவத்தை தொடர்புகொண்டு கேட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.
இறுதி யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கானவர்கள் படையினரிடம் சரணடைந்த போதிலும் பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் சரணடையவில்லை.
அவர்கள் உயிரிழந்தமைக்கான சாட்சியங்கள் எதுவும் இல்லை எனவும் இராணுவ ஊடகப் போச்சாளர் மேலும் தெரிவித்தார்.
துவாரகா உயிருடன் இருப்பதாக 2009 ஆம் ஆண்டிலேயே கூறப்பட்டது
இதனிடையே, மதிவதனி மற்றும் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக தற்போது காணொளியூடாக தகவல் வெளியிட்டுள்ள மதிவதனியின் சகோதரி, இந்த விடயத்தினை 2009 ஆம் ஆண்டே கூறியிருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
தற்போது வெளியாகியுள்ள காணொளியையும் பார்வையிட்டதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
எனினும், இந்த இருவரையும் தான் இதுவரை சந்திக்கவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.
துவாரகா பெயரில் நடக்கும் மோசடி
இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா பெயரை பயன்படுத்தி நிதிதிரட்டும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தவிடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்தார்.
பிரபாகரனின் மகள் துவாரகா லண்டனில் இருக்கிறார். இவரது பெயரை பயன்படுத்தி சுவிட்ஸர்லாந்தில் நிதி திரட்டி மோசடி செய்துள்ளனர்.
இது பிரபாகரனின் உண்மையான மகள் இல்லை என்பது தெரியவந்ததை அடுத்து, இந்த நிதி திரட்டும் மோசடி செயல் அடியோடு நிறுத்தபட்டதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
பிரபாகரன் தன் இனத்திற்காகவும் இன மக்களுக்காகவும் குடும்பத்தையே இழந்தவர். அவரது பெயரை பயன்படுத்தி இவ்வாறு மோசடி செயலில் ஈடுபடுவது மிகவும் மோசமான செயலாகும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.