‘ஷி யான் 6’ ஆராய்ச்சி கப்பல் தென்சீன கடலில் நங்கூரமிடப்பட்டது; இந்தியா இலங்கையுடன் இராஜதந்திர பேச்சு

0
105
Article Top Ad

இலங்கை நோக்கிவரவுள்ள “ஷி யான் 6“ (Shi Yan 6) ஆராய்ச்சி கப்பல் தென்சீன கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“ஷி யான் 6“ ஆராய்ச்சி கப்பல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முற்பகுதியில் இலங்கைக்கு வரவுள்ளதுடன், இந்த கப்பலின் வருகையை தடுத்து நிறுத்த இந்தியா உத்தியோகப்பூர்வமற்ற இராஜதந்திர மட்ட பேச்சுகளை இலங்கையுடன் ஆரம்பித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் இராணுவ மற்றும் கடற்படையின் போர்க்கப்பலான HAI YANG 24 HAO கடந்த 10ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வந்ததுடன், 12ஆம் திகதிவரை தரித்துவைக்கப்பட்டது. 129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 அதிகாரிகள் வருகைதந்தனர்.

இதேவேளை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி சீனாவின் கடற்படை கப்பலொன்று அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைதந்திருந்தது.

யுவான் வாங் 5 (Yuan Wang 5 ) என்ற இந்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிறுத்த இலங்கை வழங்கிய அனுமதிக்கு கவலையுற்றதாக இந்தியா கூறியிருந்தது.

இந்தியாவை உளவுபார்க்கும் நோக்கிலேயே குறித்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்துவைக்கப்பட்டதாகவும் இந்தியா குற்றம் சுமத்தியது.

இவ்வாறான பின்புலத்திலேயே கடந்த 10ஆம் திகதி HAI YANG 24 HAO கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்துவைக்கப்பட்டது. இந்த கப்பலின் வருகையை தடுக்கவும் இந்தியா இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. என்றாலும், இந்தியாவின் முயற்சிகள் இந்த விடயத்தில் தோல்வியிலேயே முடிந்தன.

இந்நிலையில், மற்மொரு சீனாவின் ஆய்வு கப்பலான “ஷி யான் 6“ ஒக்டோபர் மாதம் இலங்கை வரவுள்ளதாக வெளியான தகவல்கள் இந்தியாவை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் பின்னர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் வலுவானதாக மாறிவரும் பின்புலத்தில் சீனாவின் இந்த நடவடிக்கை இந்தியாவை கவலையடைய செய்துள்ளது.

ஷி யான் 6 கப்பலின் வருகைக்கு இலங்கை இன்னமும் பச்சை சமிக்ஞை வழங்கவில்லை என்றாலும், இலங்கை ஒப்புதலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இதனை தடுத்து நிறுத்த இந்தியா உத்தியோகப்பூர்வமற்ற இராஜதந்திர பேச்சுகளை ஆரம்பித்துள்ளதாகவும் இந்துஸ்தான் டைம்ஸ் (hindustan times) செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய நலன்களுக்கு இலங்கையால் பாதிப்புகள் ஏற்படாதென உறுதியளிக்கப்பட்ட பின்புலத்திலேயே இந்த நிகழ்வுகள் இடம்பெறுவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய ஊடகங்கள், ஷி யான் 6, கணிசமான 3,999 தொன்கள் எடை கொண்டது மற்றும் குவாங்சோவில் உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி கப்பல் என்றும் தற்போது இந்தக் கப்பல் தென் சீனக் கடலில் தரித்துவைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய அரசாங்கம் இந்த விடயத்தில் உத்தியோகபூர்வ பேச்சுகள் எதையும் நடத்தவில்லை. ஆனால் இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, இந்திய இராஜதந்திரிகள் இலங்கையுடன் உயர்மட்ட இராஜதந்திர பேச்சுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.