சர்வதேச நாணய நிதியம் தனது வேலைத்திட்டத்தின் முதல் மீளாய்வை நடத்தி இரண்டாவது தவணை நிதியை வழங்கவிருக்கும் போது, செப்டெம்பர் மாத இறுதிக்குள் இலங்கை 71 நிபந்தனைகளை நிறைவேற்றியிருக்க வேண்டும் என வெரிட்டி ரிசர்ச் (Verité Research) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த இலக்கை அடைய, இலங்கை ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் மாதத்திற்கு 18 கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
இதேவேளை, இவ்வாண்டின் கடந்த ஜூலை மாதத்துக்கு இடையில் சர்வதேச நாணய நிதியத்தின் முன்னேற்றத்தை அளவிடக்கூடிய 15 வீதமான நிபந்தனைகளின் முன்னேற்றம் தொடர்பில் எந்த விதமான தகவல்களும் வெளியாகவில்லை என வெரிட்டி ரிசர்ச் (Verité Research) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 100 நிபந்தனைகளில் 35 வீதமானவை நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட 15 வீதமான நிபந்தனைகள் தொடர்பில் வெரிட்டி ரிசர்ச் (Verité Research) வெளியிட்டுள்ள IMF Tracker அறிக்கையில் “தெரியாதது ” (“Unknown”) என குறிப்பிடப்பட்டுள்ளது.
“தெரியாதது ” (“Unknown”) என வகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவுக்குப் பிறகும், தரவுகளைக் கண்டறிய முடியாத நிலையில் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு எந்த தரவுகளும் இல்லாத காரணத்தினால் அவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இது கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஜூலை மாதத்துக்கு இடையில் 9 வீதத்திலிருந்து 15 வீதமாக உயர்வடைந்துள்ளதாக வெரிட்டி ரிசர்ச் (Verité Research) அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலைமை வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை தொடர்பில் கேள்விகளை எழுப்புவதாக வெரிட்டி ரிசர்ச் தெரிவித்துள்ளது.
வெரிட்டி ரிசர்ச் இன் IMF மீட்டர், சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட உறுதிப்பாடுகளின் முன்னேற்றத்தை “நிறைவேற்றப்பட்டது”, “நிறைவேற்றப்படாத” மற்றும் “தெரியாதது” என வகைப்படுத்துகிறது.
“தெரியாத” என வகைப்படுத்தப்பட்ட பொறுப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இரண்டு காரணிகளின் அடிப்படையில் இருக்கலாம் என்று வெரிட்டி ரிசர்ச் குறிப்பிடுகிறது.
முதலாவதாக, அரசாங்கம் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது, அதனால் தோல்வியை ஒப்புக்கொள்வதை தாமதப்படுத்துகிறது.
இரண்டாவதாக, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முக்கியமான பங்குதாரர்களாகக் கருதப்படாததால், மக்களுக்கு அல்லது பாராளுமன்றத்திற்கு முக்கியமான தகவல்களை வழங்குவதில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. என வெரிட்டி ரிசர்ச் தனது ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையானது கடந்த ஜூலை மாத இறுதிக்குள், சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டம் தொடர்பாக நிறைவேற்றப்பட வேண்டிய 57 வாக்குறுதிகளில் 35 ஐ இலங்கை நிறைவேற்றியுள்ளது.
இது கடந்த ஜூன் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட 33 வாக்குறுதிகளை விட அதிகமாகும் எண்ணிக்கையை சுட்டிக்காட்டுகிறது.
இதேவேளை, கடந்த ஜூலை மாதம், இரண்டு முக்கியமான சட்டமூலங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
அவையாவன, இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் மற்றும் ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் என்பவையாகும் .
இந்த சட்டமூலங்கள் முறையே இவ்வருடத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் ஒப்புதல் பெற திட்டமிடப்பட்டது.
இதன்மூலம் இலங்கை முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவின்படி அல்லாமல் மாறாக கணிசமான காலதாமதத்துடன் செல்கிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
மேலும், மார்ச் மாதத்தில், இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஒரு நல்ல ஆரம்பத்தை பதிவு செய்துள்ள நிலையில் பின்னர் நிபந்தனைகளை நிறைவேற்றும் வீதமானது மூன்று நிபந்தனைகளை விட குறைவடைந்து.
கடந்த ஜூலை மாதம் இறுதி வரையில் , மொத்தம் 7 பொறுப்புகள் “நிறைவேறாத” பொறுப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வெரிட்டி ரிசர்ச் (Verité Research) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.