பாதகமான வானிலை; கொழும்பில் நடைபெறவுள்ள போட்டிகளை இடம் மாற்றுகிறது ஆசிய கிரிக்கெட் பேரவை

0
83
Article Top Ad

கொழும்பில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவரும் நிலையில், ஆசியக் கிண்ணத்தின் ‘சூப்பர் 4’ சுற்றுக்கான இடத்தை மாற்றுவது குறித்து ஆசிய கிரிக்கெட் பேரவை ஆலோசித்துள்ளது.

கொழும்பில் உள்ள நிலைமைகள் குறித்து அணிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பல்லேகல மற்றும் தம்புள்ளை ஆகிய மாற்று தெரிவுகள் பார்க்கப்படுவதாகவும் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஆசியக் கிண்ண தொடரின் ‘சூப்பர் 4 ‘ சுற்று அடுத்த வாரம் தொடங்குகிறது.

நாட்டின் வறண்ட பிரதேசமாக தம்புள்ளை காணப்படுவதால் இங்கு அடுத்தகட்ட போட்டிகளை நடத்த இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பரிந்துரைத்திருந்தது.

இருப்பினும், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினர் தம்புள்ளை, பல்லேகல மற்றும் கொழும்புக்கு மாறி மாறி செல்ல தயக்கம் காட்டியதால் பல்லேகல மற்றும் கொழும்பில் போட்டிகளை நடத்த இணக்கம் காணப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், திடீரென இலங்கையில் பருவமழை ஆரம்பித்திருப்பதால் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மழை காரணமாக பல்லேகலேயில் நேற்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியும் கைவிடப்பட்டது.

கொழும்பில் நிலைமை மாறலாம் என்ற நம்பிக்கை இருந்த நிலையில், நேற்றுமுதல் பெய்துவரும் கன மழை அந்த நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் நடத்தப்படவுள்ள போட்டிகளை மறுபரிசீலனை செய்ய ஆசிய கிரிக்கெட் பேரவை ஆலோசித்து வருகிறது.

கொழும்பில் முதல் போட்டி செப்டம்பர் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது. என்றாலும், வானிலை முன்னறிவிப்புகள் சாதகமாக தெரியவில்லை என ஆசிய கிரிக்கெட் பேரவை கருதுகிறது.

அடுத்த 24-48 மணி நேரத்தில் ஆசிய கிரிக்கெட் பேரவை இறுதி அறிவிப்பை வெளியிடும் எனவும் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.