“தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்குக்கூட சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற இனவாதிகளுக்கு எந்த அருகதையும் கிடையாது. எங்களுடைய உரிமைக்காகப் போராடிய எங்களின் தேசியத் தலைவர் பிரபாகரனின் நியாயமான நிலைப்பாடுகளை நாங்கள் சுட்டிக்காட்டுவதற்கு ஒருபோதும் தயங்கப்போவதில்லை.”
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
‘விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைத் துதிபாடுவோரை அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்’ – என்று சிங்களக் கடும்போக்குவாத நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே கஜேந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் மிகக் கீழ்த்தனமான சிங்கள – பௌத்த இனவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றவர்கள். இங்கு ஏனைய இனத்தவர்கள், மதத்தவர்கள் வாழ்வதற்கு அவர்களுக்கு உடன்பாடில்லை. குறிப்பாகத் தமிழர்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் குறிக்கோள்.
தங்களைப் போன்ற இனவெறியர்களின் செயற்பாடுகளாலேயே தமிழர்கள் ஆயுதமேந்திப் போராடினார்கள் என்ற உண்மையை இன்று பெரும்பான்மையினத்தவர்களின் தரப்பில் இருந்தே சொல்லப்படுவதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
தமிழ்த் தரப்பில் இருந்து உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளி அல்லது கொலை செய்து கதையை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த மூன்று இனவாதிகளும் இருக்கின்றார்கள் என்பதை அவர்களின் கருத்து வெளிப்படுத்துகின்றது. இவர்களின் அச்சுறுத்தல்களுக்குத் தமிழ்ச் சமூகம் அடிபணியப்போவதில்லை.
எங்களுடைய உரிமைக்காகப் போராடிய எங்களின் தேசியத் தலைவர் பிரபாகரனின் நியாயமான நிலைப்பாடுகளை நாங்கள் சுட்டிக்காட்டுவதற்கு ஒருபோதும் தயங்கப்போவதில்லை.” – என்றார்.
………..