பிரித்தானியாவில் ‘வாக்னர் குழு’ பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

0
59
Article Top Ad

ரஷ்ய கூலிப்படையான வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரித்தானிய அரசாங்கம் தடை செய்ய உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, உறுப்பினராக இருப்பது அல்லது குழுவிற்கு ஆதரவளிப்பது சட்டவிரோதமானது என உள்துறை அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள வரைவு உத்தரவு வாக்னர் குழுவின் சொத்துக்களை பயங்கரவாதச் சொத்தாக வகைப்படுத்தி பறிமுதல் செய்ய அனுமதிக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாக்னர் குழு “வன்முறை மற்றும் அழிவுகரமானது” என்று உள்துறை செயலர் சுயெல்லா பிராவர்மேன் விபரித்துள்ளார்.

அத்துடன், இந்த குழுவினர் “வெளிநாட்டில் விளாடிமிர் புடினின் ரஷ்யாவின் இராணுவ கருவியாக செயல்பட்டது” என்றும் கூறியுள்ளார்.

உக்ரைன், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா முழுவதும், வாக்னர் குழு கொள்ளை, சித்திரவதை மற்றும் “காட்டுமிராண்டித்தனமான கொலைகளில்” ஈடுபட்டுள்ளார்.

இது உலகளாவிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்னர் குழு மீதான தடை பிரித்தானிய சட்டத்தில் மிகத் தெளிவாக உள்ளது என்று உள்துறை செயலர் சுயெல்லா பிராவர்மேன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த தடை உத்தரவு செப்டம்பர் 13 முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு குழுவைச் சேர்ந்தவர் குழுவை ஊக்குவிப்பது, அதன் கூட்டங்களை ஏற்பாடு செய்வது அல்லது உரையாற்றுவது மற்றும் அதன் இலட்சினையை பொதுவில் எடுத்துச் செல்வது குற்றவியல் குற்றமாகும்.

இந்த குற்றங்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் டேவிட் லாமி, இந்த நடவடிக்கை “நீண்ட காலதாமதமானது” என விளித்துள்ளார்.

“இப்போது புடினின் ஆக்கிரமிப்பு குற்றத்திற்காக அவர் மீது வழக்குத் தொடர ஒரு சிறப்பு நீதிமன்றத்திற்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும்,” என்று X செயலியில் குறிப்பிட்டுள்ளார்.

வாக்னர் கூலிப்படை குழு சிரியா, லிபியா மற்றும் வடக்கு – மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

ரஷ்யாவின் 2022-2023 குளிர்காலத் தாக்குதலுக்கு உக்ரைனில் சண்டையிடுவதற்கு ரஷ்ய சிறைகளில் இருந்து ஆயிரக்கணக்கான குற்றவாளிகளை தமது குழுவில் வாக்னர் குழு இணைத்துக்கொண்டது.

இந்த ஆண்டு ஜூன் மாதம், குழு ரஷ்யாவில் ஒரு குறுகிய கலகத்தை ஏற்படுத்திய நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புடினால் தேசத்துரோகமாகக் கண்டனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற விமான விபத்தில் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் மற்றும் உயர்மட்ட லெப்டினன்ட்கள் உயிரிழந்தனர்.

எவ்வாறாயினும், அண்மையில் வெளியான காணொளி ஒன்றில் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் தோன்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.