சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை தனது தந்தை எஸ்.டபிள்யு. ஆர். டி . பண்டாரநாயக்க கொண்டுவந்தமையையிட்டு ஆழ்ந்த கவலையடைவதாக சுனேத்திரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
நியுஸ்பெர்ஸ்டின் பராஸ் ஷாகுட் அலியுடனான நேர்காணிலின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நேர்காணலின் போது ‘ உங்களது தந்தை சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்திருக்காவிட்டால் இந்த நாடு தற்போது செழித்தோங்கியிருக்கும் . பறங்கியர்கள் நாட்டைவிட்டுப் போனார்கள் .
பின்னர் புத்திசாலித் தமிழர்கள் போனார்கள். பின்னர் எஞ்சியிருந்தவர்களே இங்கே மீதமிருந்தனர்.’ என ஒருவர் எழுப்பிய கேள்வியை வாசித்து நீங்கள் இதற்குப் பதிலளிக்க விரும்புகின்றீர்களா ? என சுனேத்திரா பண்டாரநாயக்கவிடம் கேட்டார் பராஸ்.
அதற்கு ஆம் நான் பதிலளிக்க விரும்புகின்றேன் என சுனேத்திரா கூறினார். அவரது பதில் பின்வருமாறு ‘ அவர் எனது தந்தை . ஆனால் கேள்விகேட்பவர் கூறுவதுடன் நான் உடன்படுகின்றேன். நான் எப்போதுமே இந்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றேன். நான் கூறுவது பொருத்தமாக இருக்குமோ தெரியாது .
ஆனால் உண்மை சொல்லப்படவேண்டும். ஏன் அவர் அப்படிச் செய்தார் என்பதை யாரும் தமக்கேற்றவாறு ஊகிக்கலாம். அது சந்தர்ப்பவாதமாக இருக்கலாம் .அன்றேல் தன்னை அரசியல் ரீதியாக பிரபல்யப்படுத்துவதற்காக இருக்கலாம்.
அது எனக்குத் தெரியாது. ஆனால் இந்தநபர் கூறுவது உண்மையாகும். அது எனக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகின்றது.” என சுனேத்திரா பண்டாரநாயக்க கூறினார்.
சிங்கள மட்டும் சட்டமும் அதன் பின்னணியும்
சிங்களம் மட்டும் சட்டம் (Sinhala Only Act) அல்லது அதிகாரபூர்வமாக 1956 ம் ஆண்டின் 33ம் இலக்க அரசகரும மொழிகள் சட்டம் (Official Language Act) என்பது எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தால் 1956 ஆம் ஆண்டு ஜுன் 5 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி’ என்ற சட்டத்தைக் குறிக்கும்.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையின் ஆட்சிமொழியான ஆங்கில மொழி அகற்றப்பட்டு 70% பெரும்பான்மை சிங்களவர்கள் பேசும் சிங்கள மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது.
1948 ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்று டொமினியன் அந்தஸ்து பெற்றது.
1951 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி இலங்கை சுதந்திரக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார்.
இக்கட்சியின் மகாஜன எக்சத் பெரமுன கூட்டணி 1956 தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. பண்டாரநாயக்கவின் அமைச்சரவை பதவியேற்று 53 நாட்களுக்குள் (1956 ஜுன் 5) சிங்களம் மட்டும் சட்டம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டமூலத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்தது. தமிழ்க் கட்சிகள், மற்றும் சமசமாஜக் கட்சிஇ கம்யூனிஸ்டுகள் எதிர்த்து வாக்களித்தனர்.
இம்மசோதா 1956 ஜுலை 6 இல் செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட போது 19 பேர் ஆதரவாகவும் 6 உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களித்தனர்.
இச்சட்டமூலத்தின் காரணமாக அரசுப்பணியில் உள்ள தமிழர்களும் சிங்களம் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
சுதந்திர கட்சி ஒரு இடதுசாரி கட்சியாக இருந்தாலும் இச்சட்டத்தினை சில தமிழ், மற்றும் சிங்கள இடதுசாரி உறுப்பினர்கள் கூட எதிர்த்தனர். எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் பல போராட்டங்கள், முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற தமிழர் பகுதிகளில் அரசின் செயற்பாடுகள் இயங்க விடாது செய்யப்பட்டன.
தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து பண்டாரநாயக்க அரசு 1958 செப்டெம்பர் 3 ஆம் நாள் 1958(28) என்ற திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி ‘நியாயமான தமிழ் மொழிப் பயன்பாட்டை’ அங்கீகரித்தது.
பின்வரும் சலுகைகளை விதந்துரைத்தது:
*தமிழ்ப் பாடசாலைகளில் போதனாமொழியாகத் தமிழ்
*தமிழர்கள் அரச சேவையில் சேர்வதற்கான போட்டிச் சோதனைகள் தமிழில் நடத்தப்படல்
*அரச நிறுவன தொடர்பு மொழி தமிழ்
*வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச நடவடிக்கைகள் தமிழில் இடம்பெறல்
ஆகியனவாகும்
தமிழர் வாழ் பகுதிகளில் தமிழும் பயன்படுத்தப்படலாம் எனும் திருத்தம் ஏற்படுத்தப்பட்டது. சுதந்திர இலங்கையில் இனங்களுக்கிடேயே பகையை உருவாக்கிய முதலாவது சட்டமாக இச்சட்டம் பலராலும் கருதப்படுகிறது.