“மாலைத்தீவில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு இராணுவம் உடனடியாக வெளியேற்றப்படும்“
– இவ்வாறு அந்நாட்டு புதிய ஜனாதிபதி முகமது முயீஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவம் என்ற பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தன் கருத்தை, அவர் வெளிப்படுத்தி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்காசிய நாடான மாலைத்தீவு ஜனாதிபதித் தேர்தலில், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முகமது முயீஸ் வெற்றி பெற்றதை அடுத்து, அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக அவர் பொறுப்பேற்க உள்ளார்.
வெற்றிக்கு பின்னர் இடம்பெற்ற முதல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முகமது முயீஸ், ”மாலைத்தீவில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு இராணுவ படைகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படும்” எனத் தெரிவித்தார்.
மாலைத்தீவில் இந்திய இராணுவம் மட்டுமே முகாமிட்டுள்ளது. இதன் வாயிலாக, இந்தியா என பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக அவர் தன் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
மாலைத்தீவு ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் இப்ராஹிம் முகமது சோலிஹ், இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். இவருக்கு முன் பதவியில் இருந்த ஜனாதிபதி அப்துல்லா யமீன், சீனாவுக்கு நெருக்கமாக இருந்தார். மாலைத்தீவில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளில் சீனா முதலீடு செய்தது.
ஊழல் வழக்கில் சிக்கி இவர் சிறை சென்ற பின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்ற இப்ராஹிம் முகமது சோலிஹ், சீனாவிடம் இருந்து விலகியே இருந்தார். இந்தியாவுடன் பரஸ்பரம் நல்லுறவை பேணி வந்தார்.
தற்போது, முகமது முயீஸ் ஜனாதிபதி பதவி ஏற்க உள்ளதை தொடர்ந்து, மாலைத்தீவு – சீனா உறவு மீண்டும் வலுப்பெற வாய்ப்புள்ளது.
இது, தென் சீன கடல் பகுதியின் பாதுகாப்பில் இந்தியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.