பலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச சமூகம் குரல் கொடுக்க வேண்டும். இந்த இக்கட்டான தருணத்தில் இலங்கை மக்கள் பலஸ்தீனத்துடன், இருப்பதற்காக இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் சுஹைர் தர் சைட் நன்றி தெரிவித்தார்.
இலங்கைக்கான பலஸ்தீன தூதரகம் இன்று (27) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
பலஸ்தீனம் எதிர்கொண்டுள்ள இந்த இக்கட்டான நேரத்தில் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக நிற்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கையின் பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களும் பலஸ்தீனம் தற்போது எதிர்நோக்கி வரும் நிலைமையை புரிந்து கொண்டு செயல்படுகின்றன.
இஸ்ரேல் – பலஸ்தீன மோதல்களுக்கு மத்தியில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் குடும்பத்திற்கு பலஸ்தீன அரசாங்கம் அனுதாபங்களை தெரிவிக்கிறது.
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் அனைத்தும் கடுமையான மனித உரிமை மீறல்களாகும். சர்வதேச சமூகம் பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும்.
சர்வதேச சட்டத்தின்படி, இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கிறோம்.
காஸா பகுதியானது வரலாற்றில் இருந்து பலஸ்தீனத்திற்கு சொந்தமான ஒரு பிரதேசமாகும்.
தற்போது பலஸ்தீனத்திற்கு எதிராக செயற்படும் ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா குறித்து கவலையடைகிறோம்.
எமது பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை அழித்து தேசிய வளங்களை கொள்ளையடிக்கும் தலையீடுகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
அல்ஜசீரா ஊடகவியலாளர் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நேற்றைய தினம் தாக்குதலில் உயிரிழந்தனர். இதற்கும் கவலை தெரிவிக்கிறோம்.“ என்றும் தூதுவர் தெரிவித்தார்.