டக்வொர்த் லூவிஸ் முறைப்படி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வெற்றிகொண்டது பாகிஸ்தான்

0
60
Article Top Ad

உலகக் கிண்ணத் தொடரின் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய 35ஆவது லீக் ஆட்டத்தில் டக்வொர்த் லூவிஸ் முறைப்படி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பாகிஸ்தான் அணி வெற்றிகொண்டுள்ளது.

உலகக் கிண்ணத் தொடரின் 35ஆவது லீக் ஆட்டம் இன்று பெங்களுரில் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்த போட்டியில் மோதின.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தெரிவுசெய்தது.

அதன் பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே வானவேடிக்கையை நிகழ்த்தியது.

வீசப்பட்ட பெரும்பான்மையான பந்துகள் எல்லைக் கோட்டை கடந்து ஆறு ஓட்டங்களாகவும், நான்கு ஓட்டங்களாகவும் பதிவாகின.

ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய நியூசிலாந்து அணி சார்பில் முதலில் களமிறங்கிய டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திர ஜோடி முதல் விக்கெட்டுக்காக 68 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டது.

35 ஓட்டங்களுடன் டெவோன் கான்வே அசன் அலியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து செல்ல தொடர்ந்த ஆடுகளத்தில் ரச்சின் ரவீந்திர ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய கேன் வில்லியன்சனும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ரச்சின் ரவீந்திர மற்றும் கேன் வில்லியன்சன் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்காக 228 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக்கொண்டது. ரச்சின் ரவீந்திர 108 ஓட்டங்களையும் கேன் வில்லியன்சன் 95 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இவர்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தப்பட, அடுத்துக்களமிறங்கிய வீரர்களான,

டேரில் மிட்செல் – 29

மார்க் சாப்மேன் – 39

க்ளென் பிலிப்ஸ் – 41

மிட்செல் சான்ட்னர் – 26

என்ற அடிப்படையில் ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க இறுதியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 401 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் மொஹமட் வசீம் 3 விக்கெட்டுகளையும் ஷஹீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி, இப்திகார் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் அணி 402 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. பாக். அணி 6 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில், அப்துல்லா ஷபீக் 4 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார்.

ஆனால், இரண்டாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஃபகார் சமான் மற்றும் அணியின் தலைவர் பாபர் அசாம் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

போட்டியின் இடை நடுவில் இரண்டுமுறை மழை குறுகிக்கிட்டது. இதனால், போட்டி டக்வொர்த் லூவிஸ் முறைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

மழை விடாததால் பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் 200 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்திருந்ததால் டக்வொர்த் லூவிஸ் முறைப்படி பாகிஸ்தான் அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

களத்தில் இருந்த பாபர் அசாம் 66 ஓட்டங்களையும் ஃபகார் சமான் 126 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு போட்டிகள் எஞ்சியுள்ளன. இதில் வெற்றிபெறும் அணிக்கே அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியா அணி இன்றைய தினம் இங்கிலாந்துடன் நடைபெற்றுவரும் போட்டியில் வெற்றிபெற்றுவிட்டால் அரையிறுதிக்கான அதன் வாய்ப்பை பிரகாசப்படுத்திவிடும். தோல்வி அடைந்தால் நியூசிலாந்து, அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடையே அரையிறுதிக்கு தெரிவாக கடுமையான போட்டி நிலை ஏற்படும்.