கொழும்பு : உலகக் கிண்ண தொடரில் இந்தியாவுடனான மோசமான தோல்வியை அடுத்து இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகிகளை நீக்கம் செய்தும், சபையின் நிர்வாகத்துக்காக 7 பேர் கொண்ட குழுவை அமைத்தும் விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே உத்தரவு பிறப்பித்தது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கிரிக்கெட் சபையின் விவகாரத்தில் அரசாங்கம் தலையீடு இருப்பதாக கூறி ஐசிசி உறுப்பினா் பதவியில் இருந்து இலங்கை கிரிக்கெட் சபை தடை செய்யப்பட்டது. இலங்கை கிரிக்கெட் சபையின் தொடா் செயல்பாடுகளைப் பொறுத்தே தடை நீக்கும் நடவடிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும் என ஐசிசி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் இலங்கை வீரரும் உலகக் கிண்ணத்தை வென்ற அணித் தலைவருமான அர்ஜுன ரணதுங்க, இலங்கை கிரிக்கெட் அழிவுக்கு காரணம் ஜெய் ஷா எனக் கூறியுள்ளார்.
மேலும் அதில், “இந்தியாவிலுள்ள ஒருவரால் இலங்கை கிரிக்கெட் சீர்குலைந்து வருகிறது. இலங்கை அணியிலுள்ள முக்கியமான அதிகாரிகளுக்கும் ஜெய் ஷாவுக்கும் தொடர்பிருக்கிறது.
இலங்கை அணியை ஜெய் ஷா நடத்துகிறார். அவரது அழுத்ததின் காரணமாகவே இலங்கை கிரிக்கெட் அணி அழிந்து வருகிறது. இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் என்பதால் அவருக்கு அதிகப்படியான அதிகாரம் இருக்கிறது.” எனக் கூறியுள்ளார்