வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் ஜேம்ஸ் அண்டர்சன் இந்தியத்தொடரில் 700 விக்கட்டுக்களை வீழ்த்துவாரா?

0
95
Article Top Ad

இந்தியா – இங்கிலாந்து அணிகள் பங்கேற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. இந்தத்தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணியில் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ்  அண்டர்சன் குறித்து அந்த நாட்டின் முன்னாள் வீரர் ஸ்டீவ் ஃபின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் சிம்ம சொப்பனமாக இருப்பவர் ஜேம்ஸ் அண்டர்சன்.

அவர் இதுவரை இந்திய அணிக்கு எதிராக 35 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 139 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். உலகிலேயே டெஸ்ட் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக ஒரு பந்துவீச்சாளர் எடுத்த அதிக விக்கெட்கள் இதுதான். அந்த அளவுக்கு இந்தியா என்றாலே குறி வைத்து பந்து வீசி வருகிறார் அண்டர்சன்.

இந்திய மண்ணில் மட்டும் கொஞ்சம் குறைவாக விக்கெட்கள் எடுத்து இருக்கிறார். 13 டெஸ்ட் போட்டிகளில் 34 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். 2012இல் இங்கிலாந்து டெஸ்ட் அணி இந்திய மண்ணில் வைத்தே இந்திய அணியை வீழ்த்தி இருந்தது. அந்த அணியில் ஆண்டர்சன் இடம் பெற்று இருந்தார்.

அப்போது அவர் 4 போட்டிகளில் 12 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். கடைசியாக 2021இல் இந்தியா வந்த இங்கிலாந்து அணியிலும் இடம் பெற்று இருந்த ஆண்டர்சன் 3 போட்டிகளில் 8 விக்கெட்கள் வீழ்த்தினார். அவர் இந்தப் போட்டிகளில் எல்லாம் குறைவாகவே பந்து வீசியதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் 2024இல் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க வருகிறார் ஆண்டர்சன்.

அவருக்கு தற்போது 41 வயதாகிறது. ஆனாலும் விடாப்பிடியாக டெஸ்ட் போட்டிகளில் ஆடியே தீருவேன் என அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் 10 விக்கெட்கள் வீழ்த்தினால் டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டுவார். ஷேன் வார்னே மற்றும் முத்தையா முரளிதரன் மட்டுமே இந்த மைல்கல்லை தாண்டி உள்ளனர். ஆனால் வேகப் பந்துவீச்சாளர்களில் முதல் நபராக ஆண்டர்சன் 700 விக்கெட்கள் என்ற மைல்கல்லை தொட இருக்கிறார்.