மகளுக்கு பிரியா விடை கொடுத்த இளையராஜா
தேனி அருகே உள்ள பண்ணையபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பாடகி பவதாரணியின் உடலுக்கு இசைஞானி இளையராஜா இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கனத்த இதயத்துடன் தன் மகளின் உடலுக்கு அருகே வந்த இளையராஜா, அன்பு மகளை பார்த்தபடியே உடைந்து நின்றது அங்கிருந்தவர்களை கலங்க செய்தது.
தனி விமானத்தில் மதுரை பறந்த இளையராஜா
தனது மகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இளையராஜா தனி விமானத்தில் சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் சென்று, சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டு பண்ணைப்புரம் சென்றுள்ளார்.
தற்போது பவதாரிணியின் இறுதிச்சடங்கிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
மேலும், சிம்பு, கார்த்தி, விஷால் மற்றும் சிவக்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் இறுதி அஞ்சலி நடைபெற இருக்கும் இடத்தில் குவிந்துள்ளனர்.
சொந்த ஊரில் பாடகி பவதாரிணி உடல்
இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணியின் உடல் இன்று தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
லோயர் கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையில் குருவனூத்து பாலம் அருகே உள்ள குருகிருபா வேதபாடசாலை ஆசிரமத்தில் தற்போது பவதாரிணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
பொதுமக்களின் அஞ்சலியை தொடர்ந்து இன்று மாலை பவதாரிணியின் உடல் இளையராஜாவின் தாய் சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
பொதுமக்கள் அஞ்சலியை தொடர்ந்து, பவதாரிணியின் உடல் இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.
மேலும், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார்.
கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் மரணம் அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.