1,000 அதிகமான மருத்துவர்கள் இந்தியாவில் கொரோனாவிற்கு பலியாகியுள்ளதாக அதிர்ச்சித்தகவல்

முதலாவது அலையில் 748 மருத்துவர்கள் பலியான அதேவேளை 2வது அலையில் இதுவரை 269 மருத்துவர்கள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0
270
Article Top Ad

இந்திய மருத்துவ சங்கப் பதிவேட்டில் பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் 269 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டும் 50 மருத்துவர்கள் கொரோனாவுக்கு பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக பீகாரில் 69 மருத்துவர்களும், உத்தரப்பிரதேசத்தில் 34 பேரும், டெல்லியில் 27 பேரும் தங்கள் உயிர் இழந்துள்ளனர்.இந்த மருத்துவர்களில் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே முழு தடுப்பூசி போடப்பட்டது.

இவர்களில் டெல்லியைச் சேர்ந்த டாக்டர் அனஸ் முஜாஹித் என்ற 25 வயது இளம் மருத்துவரும் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற 90 வயதான மூத்த மருத்துவரும் அடங்குவர் என இந்திய மருத்துவ சங்கப் பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா முதலாவது அலையின் போது கடந்த வருடத்தில் 748 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.இதன்படி மொத்தமாக இதுவரை பலியான மருத்துவர்கள் எண்ணிக்கை 1,017 ஆக அமைந்துள்ளது.

இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தில் ஐந்து மாதங்கள் கழித்து, இந்தியாவின் சுகாதாரப் பணியாளர்களில் 66 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள டாக்டர்களை ஊக்குவிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கே. கே. அகர்வால் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் இறந்துவிட்டதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் கூறினாலும்இ உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம்.

இந்திய மருத்துவ சங்கத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமேபதிவு செய்து உள்ளனர். இருப்பினும், இந்தியாவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர்.