ஈரானுடன் நெருக்கம் – மேற்குலகின் பகையை சம்பாதிக்கும் இலங்கை

0
18
Article Top Ad

சர்வதேச ரீதியிலான இராஜதந்திர உறவுகளை மேற்கொள்வதில் அனைத்து நாடுகளும் மூன்று பிரதான விடயங்களை அவதானம் செலுத்தும் வழக்கம்.

ஒன்று அமெரிக்காவுக்கு சார்ப்பான கொள்கை, இரண்டாவது ரஷ்யாவுக்கு சார்பான கொள்கை. மூன்றாவது இராஜதந்திர உறவை மேற்கொள்ளும் நாடு தீவிரவாதப் பின்புலத்தை கொண்ட நாடா என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.

இலங்கையின் அணிசேரா வெளிநாட்டு கொள்கை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. 1977ஆம் ஆண்டுமுதல் தீவீரமாக பின்பற்றப்படும் இந்த கொள்கையால் இலங்கை கடந்த காலத்தில் நன்மைகளைவிட தீமைகளையே அதிகம் எதிர்கொண்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் வெளிவிவகார கொள்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் அணிசேராக் கொள்கையென்ற பேரில் இலங்கை இந்தியாவுடன் பகைமைய ஏற்படுத்திக்கொண்டது. மறுபுறம், ஈரான், பாலஸ்தீனம், லிபியா உட்பட அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட நாடுகளுடன் வலுவான உறவுகளை பேண ஆரம்பித்தது.

அதேபோன்று சீனாவுடன் மிகவும் நெருக்கமான உறவை மஹிந்த ராஜபக்ச கொண்டிருந்தார். இதனால் சர்வதேச அரங்கில் இலங்கை ஒதுக்கப்பட்ட ஒரு நாடாக அடையாளப்படுத்தப்பட்டது.

2015ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட மஹிந்த ராஜபக்சவின் வெளிவிவகார கொள்கை மற்றும் இராஜதந்திர உறவுகளில் ஏற்படுத்திக்கொண்ட முறுகல்களே பிரதான காரணமாக இருந்தது.

இஸ்ரேல் – காசா போர் மற்றும் ஈரான் – இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலைக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதி இம்ராஹிம் ரைசிக்கு இலங்கையில் வழங்கப்பட்டுள்ள சிவப்பு களம்ப பிரமாண்ட வரவேற்பு அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

குற்றச்சாட்டுகளை மேற்குலகம் தொடர்ந்து முன்வைக்கிறது

மேற்குலத்துக்கும் ஈரான் போன்ற கடும் இஸ்லாமியவாதத்தை முன்நிறுத்தும் நாடுகளுக்கும் இடையில் கடுமையான முறுகல்கள் ஏற்பட்டுள்ள பின்புலத்தில் இலங்கை ஜனாதிபதி ஈரான் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருக்க கூடாதென்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது இலங்கையின் எதிர்கால பொருளாதார உறவுகள் மற்றும் இராஜதந்திர உறவுகளில் பாரிய தாக்கத்தை செலுத்தும் என இவர்கள் எச்சரித்துள்ளனர்.

மத்திய கிழக்கில் தீவிரவாதத்தை ஊக்குவிக்க ஈரான் பாரிய அளவில் நிதி உதவிகளை வழங்கி வருவதாகவும் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்புக்கும் ஈரான் நிதி உதவிகளை வழங்கி வருவதாகவும் குற்றச்சாட்டுகளை மேற்குலகம் தொடர்ந்து முன்வைக்கிறது.

இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதல் நடத்தவும் இதுவே காரணமாக உள்ளது. உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையிலான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் மத்திய கிழக்கில் ரஷ்யாவின் நகர்வுகளுக்கும் ஈரான் ஆதரவளிக்கிறது.

பாகிஸ்தான் தடைகளை எதிர்கொள்ள நேரிடும்

இதனால் சர்வதேச ரீதியில் ஈரான் கடுமையான பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ளது. பாகிஸ்தானும் மேற்குலக நாடுகளுடன் சுமூகமான உறவை பேணுவதில்லை. இலங்கையும் பாகிஸ்தானும் கடுமையான கடன் நெருக்கடிகளை எதிர்கொள்ள இந்த நாடுகளின் இராஜதந்திர கொள்கையில் உள்ள சிக்கலான நிலைமைகளே காரணம்.

பாகிஸ்தான் விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று இலங்கைவந்துள்ள ஈரான் ஜனாதிபதியுடன் இலங்கை 5 ஒப்பந்தங்களையும் கைச்சாத்திட்டுள்ளது.

ஈரானுடன் பொருளாதார ரீதியான ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டால் பல்வேறு தடைகளை பாகிஸ்தான் எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்காவும் மேற்குலகமும் கடும் எச்சரிக்கையை விடுத்திருந்தன. இதனையும் மீறி சில ஒப்பந்தங்களை இருநாடுகளும் மேற்கொண்டுள்ளன.

இந்த நாடுகள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இலங்கை நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம்

இந்தப் பின்புலத்தில் ஈரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதென இம்ராஹிம் ரைசி, ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். அத்துடன், ஈரானுடன் ஐந்து ஒப்பந்தங்களை கைச்சாத்திட இலங்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அரசாங்கம் அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.

ஏற்கனவே, ரைசியின் விஜயத்துக்கு இலங்கையில் உள்ள அமெரிக்க, இஸ்ரேல் தூதரகங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. இதற்கு மத்தியில் ஈரானுடன் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டால் இலங்கை பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடுகளை எட்டுவது மற்றும் மேற்குலகத்துடன் பொருளாதார உறவுகளை பேணுவதில் இலங்கை நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.