தொழிலாளர் தினம் நாளை உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் இதனை தேர்தல் பிரச்சாரமாகவே மாற்றியுள்ளன. ஆகவே இது மே தினமா அல்லது தேர்தல் பிரச்சாரத்துக்கான கால்கோளா என்ற கேள்விகள் எழுகின்றன.
சர்வதேச தொழிலாளர் தினம்
இலங்கைத்தீவில் மே முதலாம் திகதி அரசியல் பிரச்சாரங்கள் நடைபெறவுள்ளன. இவ்வாறு கூறினால் அதில் தவறேதும் இல்லை.
1880ஆம் ஆண்டுகளில் உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளிலும் மிகப்பெரிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு, தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 15 தொடக்கம் 20 மணித்தியாலங்கள் வரையில் உழைக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.
இதனால் அவதியுற்ற தொழிலாளர்கள் சில இடங்களில் வேலை நிறுத்தங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
பின்னர், 8 மணி நேர வேலை என உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.
இந்நிலையில், 1886ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிக்காகோ நகரில் “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.
ஆக, மே தினம் அல்லது தொழிலாளர் தினம் என்பது தொழிலாளர்களுக்காக அவரது உரிமைகளை பறைசாற்றும் விதமாக அமைந்தது. ஏனைய நாடுகளில் தொழிற்சங்கங்கள் இணைந்து தமக்கான உரிமைகளுக்காக பேரணிகளை நடாத்தி தொழிலாளர் தினத்தை கொண்டாடி வருகிறது.
இலங்கையில் தொழிலாளர் தினம்
இலங்கையில் முதல் தொழிலாளர் தலைவராக அலெக்சாண்டர் ஏகநாயக்க குணசிங்க விளங்கினார். இவர் அரசியல் இலக்குகளை கொண்டுள்ள நபராக திகழ்ந்தார். அப்போது நாட்டில் 99 வீதமான பொருளாதாரமானது தொழிலாளர்களாலும் விவசாயிகளாலும் அமைந்திருந்தது.
எனினும், இலங்கையை பொறுத்த வரையில் இம்முறை அது அவ்வாறு இல்லை.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் நாளை நடைபெறவுள்ள மே தினக் கொண்டாட்டம் அரசியல் பிரச்சாரங்களை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.
நாட்டின் தொழிலாளர்களை போற்றுவோம் என்ற நிலைமை மாறி தங்களுடைய அரசியல் பலத்தை நிரூபிப்போம் என்ற நிலை உருவாகிவிட்டது.
பொருளாதார நெருக்கடி
பொருளாதார ரீதியில் நாடு சிக்கித் தவிக்கும் இந்த தருணத்தில் இலங்கைத்தீவில் காணப்படும் பிரதான அரசியல் கட்சிகள் அவர்களுக்கான மக்கள் பலத்தை காண்பிக்கும் நோக்கில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களை மே தின பேரணிக்காக தலைநகர் கொழும்புக்கு அழைத்து வர சுமார் 1000 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளது என்ற கணக்கு அறிக்கை ஒன்றை ‘மௌபிம‘ என்ற சிங்கள நாளிதழின் ஞாயிறு இதழில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது.
உணவுத் தட்டுப்பாடு எனும் நிலை தாண்டி ஒரு சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு நபருக்கு வாழ்வாதார செலவை தாங்கிக் கொள்ள முடியாத ஒரு நிலை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது.
பாடசாலைகளில் கல்வி முறைகளில் மாற்றம் தேவை, இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பின்மை இதனால் பலர் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் போக்கு அதிகம், நாட்டில் நோய் நிலைமை, அவற்றுக்கான வைத்தியர் பற்றாக்குறை, கட்டிட துறை வீழ்ச்சி, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு , தனியார் துறையினரின் வேலைப் பளு , வரி அதிகரிப்பு இவ்வாறு நாட்டின் பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போகலாம் இத்தகைய ஒரு சூழலில் 1000 மில்லியன் ரூபாய் செலவில் மே தின அரசியல் பேரணிகள் என்பது நிச்சயம் வேடிக்கையான ஒரு விடயம் மாத்திரமே.
தொழிலாளர்கள் என எடுத்துக் கொண்டால் இன்னும் தன் உரிமைகளுக்காக போராடுபவர்கள் காணப்படுகின்றனர்.
மே தினப் பேரணிகளுக்கான ஆயத்தங்கள்
இவ்வாறானதொரு பின்னணியில் நாளை நடைபெறவுள்ள மே தின கொண்டாட்டங்களுக்காக நாடளாவிய ரீதியில் பல இடங்களில் அரசியல் பேரணிகளை நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றன.
மே தின பேரணிக்காக பங்குபற்றவுள்ள தமது கட்சி உறுப்பினர்களின் போக்குவரத்து வசதிகளுக்கான பேருந்து மற்றும் உணவுகளை வழங்குவதற்காகவே 1000 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது
இதனை உரக்கக் கூறும் வகையில் நாட்டின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி , பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகள் மே தின பேரணிகளுக்காக மைதானங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, மே தினப் பேரணிகளுக்காக 5 இலட்சம் பேர் தலைநகர் கொழும்புக்கு வருகை தரவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்களுக்கு தேவையான சுகாதார மற்றும் தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு இடம்பெறவுள்ள மே தின பேரணிகளுக்காக கொழும்பை நோக்கி வருகைத் தரவுள்ள பொது மக்களுக்காக அந்தந்த அரசியல் கட்சிகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 2000 பேருந்துகளை வழங்க நியமித்துள்ளதாகவும் அவற்றுள் 200 பேருந்துகளுக்கு மாத்திரமே பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் த அல்விஸ் தெரிவித்தார்.
இதேவேளை, 1500 தனியார் பேருந்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் பாதுகாப்பு
19 மே தின பேரணிகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ள நிலையில் அனுமதியின்றி ட்ரோன் கமரா பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரை சுற்றி பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதையடுத்து விசேட போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இங்கு தொழிலாளர் ஆர்ப்பாட்டங்களை விட அரசியல் பேரணிகளுக்கான பேருந்துகளே அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், பொது மக்கள் , உழைப்பாளி அல்லது தொழிலாளி இன்னுமும் ஒரே இடத்தில் தான் என்பது நிதர்சனமான உண்மை