இலங்கையில் ஊடகவியலாளர்களின் நிலை என்ன? இன்று உலக பத்திரிகைச் சுதந்திர தினம்

0
55
Article Top Ad

ஊடகச் சுதந்திரம் / பத்திரிகை சுதந்திரம் என்பது ஊடகங்கள் மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகும்.

சட்டம், நிர்வாகம், நீதிமன்றம், ஊடகம் ஆகியவை மக்களாட்சியின் நான்கு தூண்களாக கருதப்பட்டுகின்றன. அதன் நீட்சியாக சுதந்திர ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது.

ஊடக சுதந்திர தினத்தின் கருப்பொருள்

இந்த ஆண்டு ஊடக சுதந்திர தினத்தின் கருப்பொருள் “கிரகத்துக்கான ஒரு பத்திரிகை : உலக சுற்றுச்சூழல் நெருக்கடிகளின் மத்தியில் ஊடகவியல் துறை”என்பதாகும்.

ஐக்கிய நாடுகள் சபை 1993 இல் பத்திரிகை சுதந்திர தினத்தை அறிவித்தது. இந்த ஆண்டு அதன் 31வது ஆண்டாக அனுஷ்டிக்கின்றது.

அதன்படி, 1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி தனது நாளிதழ் அலுவலகம் முன்பாக கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட கொலம்பிய ஊடகவியலாளர் கில்லெமோ கானோவின் நினைவேந்தல் நிகழ்வுக்காக இந்த தினம் அனுஷ்ட்டிக்கப்பட்டுள்ளது.

வெகுஜன ஊடகங்களின் உரிமை

பத்திரிக்கை சுதந்திரம் என்பது தகவல், செய்தி மற்றும் அறிவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வெகுஜன ஊடகங்களின் உரிமையையும், அதே போல் சரியான தகவலைப் பரப்பும் திறனையும் குறிக்கிறது.

அன்றாட வாழ்க்கையின் முன்னேற்றங்கள் மற்றும் கடினமான சூழ்நிலைகள் குறித்து செய்திகளை வெளியிட்டு வரும் உலகம் முழுவதிலும் உள்ள ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் மிகவும் கடினமான நேரம் இது என்று உலக ஊடகவியலாளர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

போர் சூழல்களை நேரலையில் செய்தியாக்க ஊடகவியலாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைப்பது போல, பல இயற்கை பேரிடர் நிருபர்கள் மிகவும் ஆபத்தான மற்றும் கணிக்க முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர்.

2023ல் சர்வதேச செய்தியாளர்கள் என்னென்ன சவால்களை எதிர்கொண்டனர்?

பத்திரிக்கை சுதந்திரத்தை ஒரு நாளிலோ அல்லது ஒரு கருப்பொருளிலோ மட்டும் மட்டுப்படுத்தி பத்திரிகையாளரின் சிறகுகளை வெட்டுவது போல் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவது பல நாடுகளில் தொடர்ந்து நடந்து வருகிறது.

அதன்படி, பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் ஈராக் முதல் இடம் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து சிரியா காணப்படுகின்றது.

மேலும், யுக்ரைன் – ரஷ்யா போர், சிரியா – இஸ்ரேல் போருக்கு மத்தியிலும் பல ஊடகவியலாளர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதையும் நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

காசாவில் முதல் ஏழு மாத காலப் போரில் 100க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் ஊடக அலுவலகத்தில் 140க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று உயிரிழந்த அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் விசேட பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் நிலைப்பாடு

அண்மைய தசாப்தங்களில் ஊடகங்களின் செல்வாக்கு காரணமாக இலங்கையும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.

2022 ஆம் ஆண்டில், 180 நாடுகளை உள்ளடக்கிய உலக இலவச பத்திரிகை குறியீட்டில் முதல் இடத்தை நோர்வே வென்றது. இதன்படி, உலக பத்திரிகை சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை 135வது இடத்தைப் பெற்றுள்ளது.

இலங்கை ஊடகவியலாளர்களின் கொலைகளும் விசாரணைகளும்

இலங்கைத்தீவில் இடம்பெற்ற 30 வருட போரில் வடக்குக் கிழக்கில் ஊடகத்துறையைச் சேர்ந்த 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக யாழ். ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் இராணுவ ஆய்வாளா் டி. சிவாராம் 2005ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். அவருடைய சடலம் நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள பற்றைக் காடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது.

இதுவரை விசாரணைகள் இல்லை. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று அரசியல் ஆய்வாளர் லசந்த விக்கிரமதுங்க கொழும்பில் 2009 ஜனவரி மாதம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதுவரை விசாரணை இல்லை.

2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரகித் எக்னொலிகொட கடத்துப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.

தமிழர்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வுகள் இன்மை மற்றும் அரசியல் தலைவர்களின் ஊழல் மோசடி, அதிகாரத் துஷ்பிரேயோகம் ஆகியவற்றை மூடி மறைக்கும் நோக்கிலேயே இலங்கையில் ஊடக சுதந்திரம் மற்றும் ஊடக ஜனநாயகம் மறுக்கப்படுவதாக பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

ஊடகவியலாளர்களுக்கு ஒரு அங்கீகாரம்

இப் பின்னணியில் இன்றைய ஊடகவியலாளர்கள் பலர் இத்துறையே வேண்டாம் என சென்றுவிடுகின்றனர். அவ்வாறு சென்றவர்களில் பலர் சமூகத்துக்காகவும் அதே சமூகத்துக்காக குரல் கொடுத்தவர்களாகவே காணப்படுகின்றார்.

தற்போது அவர்கள் அவற்றை விட்டு செல்வதற்கு காரணம் அவர்களின் குரலுக்கு ஒரு நியாயமான பதில் கிடைக்காமையே எனலாம்.

இன்றைய காலகட்டத்தில் இக்கட்டான சூழ்நிலையிலும் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட தேவையில்லை. மாறாக அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டாலே போதுமானது.