டயானா கமகேவிற்கு பயணத் தடை: பதவி வெற்றிடமானதாக அறிவிப்பு

0
55
Article Top Ad

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவின் நகல்களை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் தேசிய புலனாய்வு பணிப்பாளர் அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (09) தெரிவித்தார்.

டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு சட்டரீதியாக தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்ட நிலையில் குறித்த பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

டயானா கமகே ,ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டமையால், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவரே குறித்த பதவி வெற்றிடத்திற்கு நியமிக்கப்படவுள்ளார்.