இலங்கையில் தினமும் இனங்காணப்படுகின்ற கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை திட்டமிட்ட வகையில் குறைத்துக் காண்பிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இது தொடர்பான ஆதாரங்களையும் முன்வைத்துள்ளனர்.
இம்மாதம் மே 19ம் திகதியன்று இலங்கையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 3,623 மறுதினம் 20திகதி 3,441 தொற்றாளர்கள் பதிவாகினர். பின்னர் 21ம் திகதி 3583 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். மே 21ம் திகதிக்கு பின்னர் இலங்கையில் தினசரி பதிவாகும் தொற்றாளர்கள் எண்ணிக்கை 3,000ஐ தாண்டவில்லை.
அப்படியெனில் இலங்கையில் கொரோனாவின் தாக்கம் குறைவடைந்துவிட்டதா என நீங்கள் எண்ணக்கூடும்.தினசரி இனங்காணப்படும் தொற்றாளர்கள் எண்ணிக்கை 3,000ற்குள் இருக்கின்றபோதும் அபாயமானது முன்னெப்போதுமில்லா அளவிற்கு மோசமாக உள்ளமையை தரவுகள் உணர்த்திநிற்கின்றன.
தினசரி மேற்கொள்ளப்படும் பிசிஆர் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை சடுதியாக குறைத்தமையே தினசரி இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை வீழ்ச்சிகண்டமைக்கு காரணமே தவிர நாட்டில் உண்மையாக கொரோனா பரவல் குறைவடையவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.
கடந்த மே 4திகதி தினசரி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 26,360 ஆகும். இதுவே கடந்த 24ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 17,263 ஆகும்.
பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும் தற்போதும் கூட தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை 3000ற்கு அண்மித்ததாக இருக்கின்றமைக்கு காரணம் பரிசோதிக்கும் நபர்களில் கணிசமானவர்களுக்கு தொற்று இருப்பதே காரணமென சுட்டிக்காட்டப்படுகின்றது.
கடந்த மே மாதம் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் நூற்றுக்கு 7.3% மானவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தது. இதே கடந்த 14திகதி பிசிஆர் எடுத்தவர்களில் நூற்றுக்கு 10.3% மானவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தது. இதுவே கடந்த 24ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 17.2% மானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தக்கணிப்பீட்டிற்கு அமைவாக தற்போது 25,000 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால் தினசரி 4,250 அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதற்கு வாய்ப்புண்டு.
அரசாங்கம் தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்காண்பிக்கும் அற்பத்தனமான நோக்கத்திலே பிசிஆர் சோதனைகளை குறைத்துவிட்டதா என்ற கேள்விகள் இருப்பினும் இதற்கு மேலும் பல காரணங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதில் பி.சி.ஆர். பரிசோதனைக்குரிய இரசாயனப்பொருள்களின் தட்டுப்பாடும் முக்கியகாரணமென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக ,யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
பி.சி.ஆர். பரிசோதனைக்குரிய இரசாயனப்பொருள்களின் தட்டுப்பாடு காரணமாக யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட சோதனை நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சோதனை நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இரசாயனப் பொருள்களின் தட்டுப்பாடு தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது, இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கேட்டறிந்து கொள்ளுமாறு குறிப்பிட்டார்.
“இரசாயனப்பொருள் தட்டுப்பாடு தொடர்பில் எமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு மருத்துவபீட சோதனை நிறுத்தப்பட்டுள்ளது. போதனா மருத்துவமனை சோதனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மற்றும் கொழும்புக்கும் அங்கிருந்து மாதிரிகள் அனுப்பப்படுகின்றன. சோதனைக்குரிய இரசாயனப் பொருள்கள் விரைவில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
தனியார் வைத்தியசாலைகளில் சுயமாக முன்சென்று பிசிஆர் பரிசோதனைகளைச் செய்வதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானமும் தினசரி மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவதற்கும் அதன்காரணமாக இனங்காணப்படும் தொற்றாளர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை குறைவதற்கும் மற்றுமொரு காரணமாக அமைகின்றது. இந்தக்காரணங்களால் ஒட்டமொத்த பிசிஆர் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்தக்காரணத்தை தவிர தாதியர்களின் தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்பரிப்பை மேற்கொள்கின்றமை பிசிஆர் பரிசோதனையை சில வைத்தியசாலைகளுக்கு விஸ்தரிக்க முற்பட்டபோதிலும் அந்த வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியர்கள் தமது சுயநலத்திற்காக அதனை இழுத்தடிக்கின்றமை போன்ற பல காரணங்களும் பிசிஆர் பரிசோதனைகள் குறைந்துள்ளமைக்கு மேலதீகக் காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஆக்கம்: அருண் ஆரோக்கியநாதன்