அடுத்தடுத்து அனர்த்தங்களால் திணறும் இலங்கையில் அமில மழை பெய்யலாம் என எச்சரிக்கை

0
373
Article Top Ad

கொரோனா வைரஸ் மூன்றாம் அலையின் கடுந்தாக்கம் ,பொருளாதார நெருக்கடி, மோசமான காலநிலை ,கப்பல் தீ அனர்த்தம் என அடுத்தடுத்து கடும் சிக்கல்களை எதிர்நோக்கிவரும் இலங்கைக்கு மேலும் அதிர்ச்சி காத்திருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தீ அனர்த்தத்திற்குள்ளாகியுள்ள MV X-Press Pearl  கப்பலிலிருந்து வௌியேறும் புகையால் அமில மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹதபுர இலங்கையின் முன்னணி செய்தித்தளங்களில் ஒன்றான நியூஸ்ஃபெஸ்டிற்கு வழங்கிய விசேட செவ்வியின் போது இந்த விடயம் குறித்து தௌிவுபடுத்தினார்.

தீ பரவும் கப்பலிலிருந்து Nitrogen Dioxide வாயு வௌியேறுவதால் அது காற்றுடன் கலந்து அமில மழையாக பெய்யும் வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அமில மழை கரையோரங்களில் மாத்திரமன்றி கரையோரத்தை அண்மித்த பகுதிகளிலும் பெய்யக்கூடும் என அவர் கூறினார்.

இதனால், வீடுகளுக்கு வௌியில் வாகனங்கள் உள்ளிட்ட உலோகப் பொருட்கள் இருக்குமாயின் அவற்றை மூடி வைக்குமாறும் கரையோரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ளவர்கள் மழையில் நனைவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

 

இதேவேளை MV X-Press Pearl  கப்பல் கடலில் மூழ்கும் அபாயமுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

கப்பலில் தொடர்ந்தும் தீ பரவி வருவதால் கப்பல் கடலில் மூழ்கும் என்பதுடன், அதிலுள்ள எண்ணெய் கடலில் கலப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் பேராசிரியர் டர்னி பிரதீப்குமார குறிப்பிட்டார்.

இதனிடையே வத்தளையிலிருந்து மாரவில வரையான கடற்கரை பகுதிகளின் நீர் மாதிரிகளை சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தீ பற்றிய MV X-Press Pearl  கப்பலில் இருந்து வீழ்ந்த கொள்கலன்களால் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கு நீர் மாதிரிகள் சேகரிக்கப்படுவதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது வரையான அறிக்கைகளின் பிரகாரம், இதுவரை இரசாயன பதார்த்தங்களினால் பாதிப்புகள் ஏற்படவில்லை என நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பாலித்த கித்சிறி குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் மீனவர்களின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக கடற்றொழிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் கூறினார்.

இதேவேளை திக்கோவிட்டவில் இருந்து சிலாபம் வரையான கரையோரப் பகுதியில் கடற்படையினர் விசேட கண்காணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

வௌ்ளவத்தை மற்றும் பாணந்துறை கரையோரப் பகுதிகளிலும் கடற்படையினர் கண்காணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

கடற்படையினர் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் ஒன்றிணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

தீ பரவியுள்ள கப்பலில் இருந்து கடலுக்குள் வீழ்ந்துள்ள பொருட்கள் கரை ஒதுங்குவதால் அவற்றை தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் கப்பலில் இருந்து கரையொதுங்கும் பொருட்களை சேகரித்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துங்கல்பிட்டிய பமுனுகம மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்தியாவின் ஹசீரா துறைமுகத்திலிருந்து பயணித்த MV X-Press Pearl கப்பலில் கடந்த வியாழக்கிழமை தீ பரவ ஆரம்பித்தது.

கொழும்பு துறைமுகத்திற்கு வௌியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த போதே கப்பலில் தீ பரவியது.

சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த இந்த கப்பலில் தீ பரவும் போது 25 தொன் எத்தனோல் இரசாயனப் பொருட்கள் அழகு சாதனப் பொருட்கள் அடங்கிய 1,486 கொள்கலன்கள் இருந்தன.

இலங்கை கடற்படையினர் விமானப்படையினர் துறைமுக அபிவிருத்தி அதிகார சபையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த போதிலும் சீரற்ற வானிலை மற்றும் கப்பலில் இரசாயனப் பொருட்கள் இருந்தமையால் தீயை கட்டுப்படுத்த முடியாது போனதுடன் கப்பலும் முழுமையாக தீக்கிரையானது.

MV X-Press Pearl  கப்பலில் அசிட் கசிவு ஏற்பட்டுள்ளதை அரபிக் கடல் பகுதியிலேயே கப்பல் ஊழியர்கள் அவதானித்திருந்ததாக சர்வதேச கடல்சார் விடயங்கள் குறித்து அறிக்கையிடும் Splash 24×7 இணையத்தளத்தில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

கட்டாரின் ஹமாட் மற்றும் இந்தியாவின் ஹசீரா துறைமுகங்களில் இரசாயன கொள்கலன்களை இறக்குவதற்கு MV X-Press Pearl  கப்பலின் கெப்டன் அனுமதி கோரியுள்ளார்.

எனினும் கெப்டனின் இந்த கோரிக்கையை குறித்த இரண்டு துறைமுகங்களின் நிர்வாகங்களும் நிராகரித்ததாகவும் இணையத்தள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொள்கலன்களில் உரிய முறையில் பொருட்களை களஞ்சியப்படுத்தாமையால் அசிட் கசிவு ஏற்பட்டுள்ளதாக MV X-Press Pearl  கப்பல் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த கப்பலுக்கான முழுமையான இழப்பீட்டை கோருவதற்கு குறித்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.

கட்டார் மற்றும் இந்திய துறைமுகங்கள் உரிய முறையில் தங்களின் கடமைகளை நிறைவேற்றியிருந்தால் இவ்வாறானதொரு பாரிய அழிவை தடுத்திருக்க முடியும் என கப்பல் நிறுவனம் கூறியதாக Splash 24×7 இணையத்தள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.