தீப்பற்றிய கப்பலிலிருந்து கரை ஒதுங்கிய பொருட்களைத் தொட்டவர்களுக்கு ஒவ்வாமை!

0
363
Article Top Ad

கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்குள்ளான ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலிலிருந்து கரை ஒதுங்கிய பொருட்களை எடுத்த பலர் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

எரிந்து கொண்டிருக்கும் ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்துள்ள இரசாயனக் கொள்கலன்கள் மற்றும் சிதைவுகள் நீர்கொழும்பு மற்றும் அதனை அண்மித்த கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் அதனை அங்கு வசிக்கும் மக்கள் எடுத்துச் செல்வதை சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் காண முடிந்தது.

ஏற்கனவே இந்தப் பொருட்களைப் பிடிப்பது ஆபத்தானது எனக் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்திருந்த  அறிவிப்பை மீறி எடுத்து சென்றவர்களில் பலரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்நிலையியே இவ்வாறு கடலில் மிதந்து வந்த பொருட்களைப் பிடித்தவர்களில் பலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது எனக் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி கஹந்தபுர தெரிவித்துள்ளார்.

இதனிடையே பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் இரசாயனக் கழிவுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடற்கரையில் குவிந்துள்ள கப்பலின் கழிவுகளைச் சேகரிப்பது ஆபத்தானது எனவும்  அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு கரை ஒதுங்கும் கொள்கலன்கள் மற்றும் பிற பொருட்கள் குறித்து ‘1981’ என்ற எண்ணுக்கு அறிவிக்கும்படியும் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.