இந்த ஆண்டின் இறுதி வரையிலும் கொரோனாவுடன் போராட நேரிடும்

நாட்டில் 70 வீதமானவர்களுக்கேனும் தடுப்பூசியை ஏற்றிய பின்னரே வழமையான செயற்பாடுகள் குறித்து சிந்திக்க முடியும்.

1
717
Article Top Ad

இலங்கையில் 70 வீதமானோருக்கேனும் தடுப்பூசியை ஏற்றினால் மாத்திரமே கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தப்பிக்க முடியும் என்று தேசிய மருந்தாக்கல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிகளை இந்த ஆண்டு இறுதி வரையில் நாடு எதிர்கொள்ள நேரிடும். நாட்டில் 70 வீதமானவர்களுக்கேனும் தடுப்பூசியை ஏற்றிய பின்னரே வழமையான செயற்பாடுகள் குறித்து சிந்திக்க முடியும்.

அடுத்தகட்டத்தில் மரணங்கள் அதிகரிக்கும் என்ற அச்சுறுத்தல் இருக்கின்ற காரணத்தால் வயதானவர்களுக்குத்  தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.

நாட்டின் தற்போதுள்ள நிலைமை ஆரோக்கியமானதாகக் கருத முடியாது. தொடர்ச்சியாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கும் நிலைமையே காணப்படுகின்றது.

எனவே, தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்திக் கொண்டுளோம். குறிப்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கைக்கு 3 கோடி 20 இலட்சம் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும் உடன்படிக்கைகளைச் செய்துள்ளோம். இதில் ஒரு கோடி 30 இலட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளும், 50 இலட்சம் பைசர் தடுப்பூசிகளும், ஒரு கோடி 40 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளும் நிச்சயமாகக் கிடைக்கும்.

அதற்கும் அப்பால் ஜோன்சன் அன் ஜோன்சன் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவும் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எவ்வாறு இருப்பினும் உலக நாடுகள் அனைத்துமே பாரிய நெருக்கடியில் உள்ள நிலையில், அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளையும், உலக சுகாதார ஸ்தாபனம் வழங்குவதாகக் கூறிய தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளது.

இந்த ஆண்டு இறுதி வரையிலும் கொரோனா வைரஸ் தொற்றுடன் போராட நேரிடும். 70 வீதமானவர்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றிய பின்னரே எம்மால் அடுத்தகட்ட வழமையான செயற்பாடுகள் குறித்தும் சிந்திக்க முடியும். தற்போதுள்ள நிலையில் ஆண்டு இறுதி வரைக்கும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்” – என்றார்.

1 COMMENT

Comments are closed.