ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவியது அச்சத்தால் அல்ல என்று அக்கட்சியின் ஸ்தாபகர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
அதன்படி, தனது கட்சி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடன் இல்லை என தெரிவித்த அவர், ரணிலுக்கு இன்று வரையில் வழங்கிய ஆதரவை எதிர்வரும் காலங்களிலும் வழங்குவோம் எனவும் உறுதியாகத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்க்கைக்கு 27 வருடங்கள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு களுத்துறை பொதுமக்கள் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”மதிப்பிற்குரிய ரணில்அவர்களே, நாங்கள் எந்த ஒரு அச்சம் காரணமாகவும் உங்களை ஜனாதிபதியாக நியமிக்கவில்லை. நாங்கள் உங்களுக்கு கடன் இல்லை என்று மரியாதையுடன் தெரிவிக்கிறோம்.” என கூறினார்.
அதேவேளை தற்போது மொட்டுக் கட்சி எனப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ராஜபக்ச மற்றும் ரணில் குழுக்களுக்கு இடையில் முரண்பாடுகள் இருப்பது ஒரு பக்கம் நிரூபணமாகி வருகின்றது.
எனினும், அந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு ஒரே அரசியல் பயணத்தில் அவர்கள் தீர்க்கமாக கவனம் செலுத்தியிருப்பது இந்த சந்திப்பின் மூலம் உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.