இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்ததுடன், அதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மோடி இலங்கைக்கு வர உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது. இந்தப் பயணம் குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமெனவும் தெரியவருகிறது.
இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியை தொடர வைப்பதில் இந்தியாவின் தலையீடுகள் அதிகமாக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்கவை இணைக்கும் முயற்சியில் இந்தியா தலையீடுகளை மேற்கொண்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய சர்வஜன அதிகாரம் கூட்டணியின் உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கருத்து வெளியிடுகையில்,
”மோடியுடன் ரணில் விக்ரமசிங்க நாட்டை காட்டிக்கொடுக்கும் 10 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட உள்ளார்.
எட்கா, ராமல் பாலத்தை அமைத்தல், மின் இணைப்பு, எரிபொருள் பாரிமாற்றம், விமான நிலையங்களை குத்தகைக்கு வழங்கல் என 10 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட உள்ளன.
அதற்கான நிகழ்ச்சி நிரலையே அவர் முன்னெடுத்துச் செல்கிறார். மாறாக நாட்டை காப்பாற்றும் செயல்பாடு அல்ல.” எனவும் அவர் கூறினார்.