இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித்துக்கா?: தமிழ் பொது வேட்பாளரின் பின்புலம் என்ன?

0
32
Article Top Ad

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சில கட்சிகள் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற பின்புலத்தில் அந்த விடயத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

”தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் ஊடாக தமிழ் மக்கள் கடந்த ஏழு தசாப்தங்களாக பேசிவரும் பிரச்சினையை தோல்வியில் முடிவடைய செய்யும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.” தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார்.

என்றாலும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், டொலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட பல முன்னாள் நாடாளுமன்ற, மாகாண உறுப்பினர்களும் வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகின் கூட்டணியும் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் செயல்படுகின்றனர்.

இந்த நிலையில், தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் தமிழரசுக் கட்சி நாட்டம் காட்டவில்லை என்பதுடன், கட்சியில் ஓர், இருவர் மட்டுமே அந்த நிலைப்பாட்டை ஆதரவளிக்கு எண்ணத்தில் இருப்பதாக தெரியவருகிறது.

எதிர்வரும் 10, 11ஆம் திகதிகளில் தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடம் கூட உள்ளது. இதன்போது யாருக்கு ஆதரவளிப்பதென தீர்மானிக்கப்பட உள்ளது.

தேசிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடாமையால் அக்கட்சிக்கு ஆதரவளிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை தமிழரசுக் கட்சி ஏற்கனவே எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் தமிழரசுக் கட்சியின் ஆதரவை கோரியுள்ளனர். ஆனால், இன்னமும் இறுதி நிலைப்பாட்டை கட்சி எடுக்கவில்லை.

என்றாலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை தமிழரசுக் கட்சி எடுக்க அதிகளவான வாய்ப்புகள் உள்ளதாக கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

அவ்வாறான நிலைப்பாட்டை தமிழரசுக் கட்சி எடுத்தால் அது ரணில் விக்ரமசிங்கவுக்கு பாரிய பாதிப்பை தேர்தலில் ஏற்படுத்தும் என வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் பொது வேட்பாளரின் பின்புலம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் சமூகத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து தெற்கின் பிரதான வேட்பாளர் ஒருவரின் நிகழ்ச்சி நிரலின் கீழும் அவரின் வெற்றியை உறுதிப்படுத்தவுமே இத்தகைய நகர்வுகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள பின்புலத்தில் தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித்துக்கு கிடைத்தால் அது பிரதான வேட்பாளர்களில் ஒருவராக உள்ள ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி வாய்ப்பை கடுமையாக பாதிக்கும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.