அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய தமிழர் தற்கொலை

0
14
Article Top Ad

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னின் தென்கிழக்கில் 23 வயதுடைய தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டமைக்கு நீதி கோரி அகதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2013 ஆம் ஆண்டு மனோ யோகலிங்கம் என்பவர் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வந்ததாகவும் சுமார் 11 வருடங்களாக பிரிட்ஜிங் விசாவில் இருந்ததாகவும் அவரது நண்பர்கள் ஏ.பி.சி செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளனர்.

பிரிட்ஜிங் விசா என்பது அவுஸ்திரேலியாவில் சட்டப்பூர்வமாக இருக்கும் தனிநபர்கள் மற்றொரு விசா விண்ணப்பத்தின் முடிவுக்காக காத்திருக்கும் போது அவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக விசா ஆகும்.

தற்போதைய விசாவிற்கும்விண்ணப்பிக்கும் புதிய விசாவிற்கும் இடையே ஒரு பாலமாக அந்த விசா செயல்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நோபல் பூங்காவில் உள்ள ஸ்கேட் பூங்காவிற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மனோ யோகலிங்கம் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

யோகலிங்கம் பிரிட்ஜிங் விசாவில் தங்கியிருந்தமையே அவரது மரணத்திற்கு காரணம் என நம்புவதாக தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய “விரைவுப் பாதை” முறையின் கீழ், அகதி அந்தஸ்துக்கான யோகலிங்கத்தின் கோரிக்கை முன்பு நிராகரிக்கப்பட்டதென்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஏபிசி செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக அவர் மேன்முறையீடு செய்ய முயற்சித்துள்ளார். இந்நிலையில் யோகலிங்கத்தின் விசா விண்ணப்பத்தின் நிலை குறித்து உள்துறை அமைச்சர் டோனி பர்க்கை தொடர்பு கொண்ட போது தனியுரிமை காரணங்களுக்காக, தனிப்பட்ட வழக்குகளில் கருத்து தெரிவிக்க முடியாது என உள்துறை செய்தித் தொடர்பாளர் பதிலளித்துள்ளார்.

மேலும் இந்த கடினமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

அண்மைய ஆண்டுகளில், இலங்கையில் உள்ள தமிழர்கள் உத்தியோகப்பூர்வமாக அல்லது சமூக பாகுபாட்டின் அடிப்படையில், சில சர்வதேச அமைப்புகள் மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவான சிக்கல்களை எதிர்கொள்கின்றமையே கண்டறியப்பட்டது.

ஆனால் தற்போது இளம் தந்தையின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர் மிகவும் வலிமையானவர் என்றும் அவரது இறப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும் அவரது நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.

இளம் தந்தையின் மரணத்திற்கு நீதி கோரி அவரது நண்பர்கள் நேற்று புதன்கிழமை உள்துறை அமைச்சகத்தின் டாக்லாண்ட்ஸ் அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவரது நண்பர்,

யோகலிங்கம் போன்று பல ஆண்டுகளாக பிரிட்ஜிங் விசாவில் உள்ள பலரே இங்கு கூடியுள்ளோம். பிரிட்ஜிங் விசாவில் பல ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மக்களின் குடியுரிமையை உறுதிப்படுத்த கூட்டாட்சி அரசாங்கம் அதன் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும்.

நாங்கள் இனி யாரையும் இழக்க விரும்பவில்லை, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நாங்கள் இந்த வாழ்க்கையை வாழ்ந்து வருவதால் எங்களுக்கு நிரந்தர குடியுரிமை வேண்டும்.

நாங்கள் இந்த சமூகத்திற்கு எங்களால் முடிந்த பங்களிப்பை செய்கிறோம். நாங்கள் கடின உழைப்பாளர்கள். நாங்கள் பராமரிப்பாளர்கள் மற்றும் வயதான பராமரிப்பு பணியாளர்கள்,

நாங்கள் வணிகம் செய்கிறோம், அரசாங்கத்திற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்” என ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.